ஓசூர் அருகே, காட்டுயானை தாக்கி முதியவர் படுகாயம்
ஓசூர் அருகே காட்டுயானை தாக்கியதில் முதியவர் படுகாயம் அடைந்தார்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட பேரண்டப்பள்ளி வனப்பகுதியில் ஒற்றை ஆண் காட்டுயானை முகாமிட்டுள்ளது. இந்த யானை இரவு நேரங்களில் வனப்பகுதியில் இருந்து வெளியேறி அருகில் உள்ள தின்னூர், கோபசந்திரம், ராமச்சந்திரம், புக்கசாகரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை தின்றும், காலால் மிதித்தும் அட்டகாசம் செய்து வருகிறது.
இந்த நிலையில் அந்த யானை நேற்று அதிகாலை புக்கசாகரம் பகுதியில் உள்ள விவசாய நிலத்திற்கு வந்தது. அப்போது விவசாய நிலத்திற்கு வந்த, அந்த பகுதியை சேர்ந்த செட்டியப்பா (70) என்பவரை, யானை தாக்கி தூக்கி வீசியது. இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர் ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு நல்லகானகொத்தப்பள்ளியை சேர்ந்த விவசாயி வெங்கடசாமி என்பவரை ஒற்றை யானை தாக்கியது. தேன்கனிக்கோட்டை பகுதியில் அட்டகாசம் செய்து 3 பேரை கொன்ற ஒற்றை யானை பிடிக்கப்பட்டு சத்தியமங்கலம் வனப்பகுதியில் விடப்பட்ட நிலையில், தற்போது ஓசூர், சூளகிரி பகுதியில் தனி, தனியாக 2 யானைகள் முகாமிட்டுள்ளன. இதனால் அந்த பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.
Related Tags :
Next Story