காரிமங்கலத்தில், நாளை முதல் 30-ந்தேதி வரை அனைத்து கடைகளும் மாலை 6 மணிக்கு மூடப்படும் - வணிகர் சங்க கூட்டத்தில் முடிவு


காரிமங்கலத்தில், நாளை முதல் 30-ந்தேதி வரை அனைத்து கடைகளும் மாலை 6 மணிக்கு மூடப்படும் - வணிகர் சங்க கூட்டத்தில் முடிவு
x
தினத்தந்தி 16 Jun 2020 3:30 AM IST (Updated: 16 Jun 2020 5:32 AM IST)
t-max-icont-min-icon

காரிமங்கலம் நகர் பகுதியில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாளை முதல் வருகிற 30-ந்தேதி வரை மாலை 6 மணிக்கு அனைத்து கடைகளையும் மூடுவது என்று அனைத்து வணிகர் சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

காரிமங்கலம்,

தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதையொட்டி மாவட்டத்தில் அரசின் பல்வேறு தளர்வுகளுடன் கடைகள், ஓட்டல்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றது. போலீசார் மற்றும் சுகாதாரத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்டம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவி வருகிறது.

இந்தநிலையில் காரிமங்கலம் ஒன்றிய அனைத்து வணிகர் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் காரிமங்கலம் திரவுபதி அம்மன் கோவிலில் நடந்தது. கூட்டத்திற்கு வணிகர் சங்க தலைவர் மாது தலைமை தாங்கினார். இதில் சங்க நிர்வாகிகள் மாதேஷ், கணேசன், ரவி, மனோகரன், சிவகுமார், பிஸ்மி மற்றும் அனைத்து வணிகர்களும் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாளை (புதன்கிழமை) முதல் வருகிற 30-ந்தேதி வரை காரிமங்கலம் நகர பகுதியில் மளிகை கடைகள் உள்பட அனைத்து கடைகளும் மாலை 6 மணிக்கு மூடுவது, பேக்கரி கடைகளை மாலை 7 மணிக்கு மூடுவது, ஓட்டல்கள் இரவு 9 மணி வரையில் செயல்படுவது என கூட்டத்தில் முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளி பின்பற்றவேண்டும் என்ற வாசகம் அடங்கிய பேனர்களை கடைகளில் வைக்க வேண்டும் என்று வணிகர் சங்க தலைவர் மாது தெரிவித்தார்.

Next Story