சேலம் மாநகரில், 24 மணி நேரமும் ஆட்டோ இயங்க அனுமதிக்க வேண்டும் - கலெக்டரிடம் கோரிக்கை


சேலம் மாநகரில், 24 மணி நேரமும் ஆட்டோ இயங்க அனுமதிக்க வேண்டும் - கலெக்டரிடம் கோரிக்கை
x
தினத்தந்தி 16 Jun 2020 3:30 AM IST (Updated: 16 Jun 2020 5:32 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாநகரில் 24 மணி நேரமும் ஆட்டோ இயங்க அனுமதிக்க வேண்டும் என்று ஆட்டோ தொழிலாளர்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

சேலம், 

சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று காலை அஸ்தம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆட்டோ தொழிலாளர்கள் வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் ராமனிடம் கொடுத்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

சேலம் மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களாக சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆட்டோ தொழிலாளர்கள் மிகவும் கடும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். அரசு அறிவித்த திட்டங்களான நிவாரணத்தொகை இதுவரை ஒரு சில நபர்களுக்கு தவிர மற்ற ஆட்டோ தொழிலாளர்கள் பெற முடியாத நிலையில் உள்ளது. குறிப்பாக நலவாரிய திட்ட பணப்பயன்கள் முறையாக கிடைக்கவில்லை.

கடந்த மாதம் 15-ந் தேதி ஊரடங்கு தளர்வு அறிவித்தபோது ஆட்டோவில் ஒரு பயணியை மட்டும் வைத்து இயக்க அரசு உத்தரவிட்டிருந்தது. அதேசமயம் கூடுதல் பயணிகளை ஏற்றிச்சென்றால் போலீசார் ஆட்டோக்களை பறிமுதல் செய்வதோடு வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதனால் ஆட்டோ தொழிலாளர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

எனவே சேலம் மாநகரில் 24 மணி நேரமும் ஆட்டோக்கள் இயங்க உரிய அனுமதி வழங்க வேண்டும். அதேபோல் சேலத்தில் போலீசாரால் சிறைபிடித்த ஆட்டோக்களை விடுவித்து அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். ஊரடங்கால் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ள ஆட்டோ டிரைவர்களுக்கு உணவு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓட்டுனர் உரிமம் வைத்துள்ள அனைத்து ஆட்டோ தொழிலாளர்கள் நலவாரியத்தின் மூலம் பயன் கிடைப்பதற்கு நலவாரியத்தில் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு நல வாரிய அலுவலகம் முழுமையாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வறுமையில் வாடும் ஆட்டோ டிரைவர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் உதவித்தொகை வழங்க வேண்டும். தற்போது மன உளைச்சல் காரணமாக இறந்துபோன ஆட்டோ டிரைவர்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரணத்தொகை வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story