கர்நாடகத்தில் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்த திட்டமா? - எடியூரப்பா பரபரப்பு தகவல்
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சென்னையில் இருந்து வருகிறவர்களை தனிமைப்படுத்த கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. மேலும் கர்நாடகத்தில் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்த திட்டமா? என்ற கேள்விக்கு முதல்-மந்திரி எடியூரப்பா பதில் அளித்துள்ளார்.
பெங்களூரு,
கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் அதிகரித்து தொடங்கியுள்ளது.
குறிப்பாக பெங்களூருவில் கடந்த வாரத்தில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 20-க்குள் இருந்து வந்தது. கடந்த 4 நாட்களாக 30, 40 என்ற அளவில் பாதித்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. எனவே கொரோனா பரவலை தடுக்க கர்நாடகத்தில் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்த அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் கொரோனாவை தடுப்பது தொடர்பாக உயர் அதிகாரிகளுடன் முதல்-மந்திரி எடியூரப்பா பெங்களூருவில் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் மந்திரிகள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்திற்கு பிறகு எடியூரப்பா நிருபர்களுக்கு அளித்தார். அப்போது கர்நாடகத்தில் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்தும் திட்டம் உள்ளதா என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:- “கர்நாடகத்தில் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்தும் திட்டம் இல்லை. வார இறுதி நாள் அதாவது ஞாயிற்றுக்கிழமையில் முழு ஊரடங்கும் செயல்படுத்த மாட்டோம். பிரதமருடன் 17-ந் தேதி கலந்துரையாடலில் பங்கேற்க உள்ளேன். அதில் ஊரடங்கை மேலும் தளர்த்த அனுமதி வழங்குமாறு கேட்க உள்ளேன்.
மக்களிடையே விழிப்புணர்வு
கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து முதல்-மந்திரி எடியூரப்பா நேற்று விதான சவுதாவில் மந்திரிகள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியபோது எடுத்தபடம்.
வருகிற 18-ந் தேதி முக கவச தினத்தை அனுசரிக்க முடிவு செய்துள்ளோம். முக கவசம் அணிவதின் அவசியம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் இந்த முடிவை எடுத்துள்ளோம். இதில் திரைப்பட நடிகர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு, தனிமனித விலகல், முக கவசம் அணிய வேண்டியதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவார்கள்.
மராட்டியத்தில் இருந்து வருபவர்கள் 7 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். அதன் பிறகு 7 நாட்கள் வீட்டு தனிமையில் இருக்க வேண்டும். சென்னை, டெல்லி உள்ளிட்ட நகரங்களில் இருந்து வருபவர்களை 3 நாட்கள் தனிமைபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகு 11 நாட்கள் வீட்டு தனிமையில் இருக்க வேண்டும்.
தனிமனித விலகல்
முக கவசம் அணியாதவர்கள், தனிமனித விலகலை பின்பற்றாதவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். கொரோனா நோயாளிகளில் 93 சதவீதம் பேருக்கு எந்த அறிகுறியும் இருப்பது இல்லை. 7 சதவீதம் பேருக்கு மட்டுமே கொரோனா அறிகுறிகள் தென்படுகின்றன.
கர்நாடகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது. இதுவரை(அதாவது நேற்று முன்தினம்) 7,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 4,386 பேர் மராட்டியத்தில் இருந்து வந்தவர்கள், இவர்களின் தொடர்பினால் பாதிக்கப்பட்டவர்கள் 1,340 பேர். வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களில் 216 பேரும், டெல்லியில் இருந்து வந்தவர்களில் 87 பேரும், தமிழ்நாட்டில் இருந்து வந்தவர்களில் 67 பேரும், குஜராத்தில் இருந்து வந்தவர்களில் 62 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அதாவது வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களில் 6,158 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதாவது வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களால் கர்நாடகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. கர்நாடகத்தில் கொரோனா பாதித்த 7 ஆயிரம் பேர்களில் 3,955 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தேசிய அளவில் நடத்தப்படும் பரிசோதனையில் 2.8 சதவீதம் பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்படுகிறது. இது கர்நாடகத்தில் 1.2 சதவீதமாக உள்ளது.
அதிகமாக பரவவில்லை
அதேபோல் குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கையும் தேசிய சராசரியைவிட கர்நாடகத்தில் அதிகமாக உள்ளது. அதாவது மொத்தம் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் 56.5 சதவீதம் பேர் குணம் அடைந்துள்ளனர். கர்நாடகத்தில் தற்போது 71 கொரோனா பரிசோதனை மையங்கள் உள்ளன. இதில் தனியார் கொரோனா பரிசோதனை மையங்கள் 30 ஆகும்.
பெங்களூருவில் 697 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. மொத்தம் 89 பேர் மரணம் அடைந்துள்ளனர். கர்நாடகத்தை பொறுத்தமட்டில் கொரோனா அதிகமாக பரவவில்லை. நமது டாக்டர்கள், செவிலியர்கள் 24 மணி நேரமும் பணியாற்றி வருகிறார்கள். டெல்லி, மராட்டிய மாநிலங்களில் இருந்து வந்தவர்களால்தான் இங்கு கொரோனா பாதிப்பு அதிகரித்தது.
அச்சப்பட தேவையில்லை
பெங்களூருவில் 697 பேர்(நேற்று முன்தின நிலவரப்படி) கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 330 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 6 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முக கவசம் அணியும் தினத்தை கிராம பஞ்சாயத்து அளவிலும் அனுசரிக்க முடிவு செய்துள்ளோம்.
8,000 பூத் மட்டத்தில் செயல்படையை அமைத்து, பிற நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்களை கண்டறிந்து முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. வீட்டுத்தனிமையில் இருப்பவர்களை கண்காணிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை கண்டறிய பரிசோதனைகளை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
கர்நாடகத்தில் 10 லட்சம் பேரில் 7,100 பேருக்கு பரிசோதனை செய்யப்படுகிறது. கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. பெங்களூரு மக்கள் அச்சப்பட தேவை இல்லை. ஆனால் அரசின் விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு எடியூரப்பா கூறினார்.
Related Tags :
Next Story