விலங்குகள் நடமாட்டம் இருப்பதால் வத்திராயிருப்பு வனப்பகுதிக்குள் செல்ல அனுமதி மறுப்பு - வருமானம் இன்றி தவிக்கும் மலைவாழ் மக்கள்
விலங்குகள் நடமாட்டம் இருப்பதால் வத்திராயிருப்பு வனப்பகுதிக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் வருமானம் இன்றி மலைவாழ் மக்கள் தவித்து வருகின்றனர்.
வத்திராயிருப்பு,
வத்திராயிருப்பு தாலுகாவிற்கு உட்பட்ட பிளவக்கல் அணை, அத்திக்கோவில், நெடுங்குளம் கூட்டம், தாணிப்பாறை ராம்நகர் ஆகிய பகுதிகளில் சுமார் 100-க்கும் மேற்பட்ட மலைவாழ் இன மக்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.
இவர்கள் மலைக்குள் இருக்கும் மூலிகைகள், கிழங்கு வகைகள் உள்பட பொருட்களை சேகரித்து விற்பனை செய்து வருவது இவர்களின் பிரதான தொழிலாக உள்ளது. இந்த பகுதியில் வசித்து வரும் மலைவாழ் இன மக்களுக்கு மலைக்குள் சென்று நன்னாரி வேர், தேன், இன்டன் கொடி, நெல்லிக்காய், கடுக்காய், சாம்பிராணி, கிழங்கு வகைகள் உள்பட 14 வகையான பொருட்களை எடுப்பதற்கும் மலைப்பகுதிகளில் சென்று கால்நடைகள் மேய்ப்பதற்கும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் கடந்த 11-ந் தேதி காலை மலைவாழ் மக்கள் வனப்பகுதிக்குள் செல்ல கூடாது. யானை, கரடி, புலிகள் உள்ளிட்ட விலங்குகளின் நடமாட்டம் இருப்பதால் வனப்பகுதிக்குள் செல்ல வேண்டாம் என வனத்துறையினர் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்தனர்.
இதையும் மீறி செல்வர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர். இதையடுத்து அப்பகுதி மக்கள் வனப்பகுதிக்குள் செல்லாமல் வாழ்வாதாரமின்றி வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர்.
இதுகுறித்து தாணிப்பாறை ராம்நகர் மலைவாழ் மக்கள் இனத்தலைவர் சுந்தரம் கூறியதாவது:-
நாங்கள் பல ஆண்டு காலமாக மலைப்பகுதிகளில் கிடைக்கும் பொருட்களை உண்டு வாழ்ந்து வந்தோம். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு தான் அரசு மற்றும் வனத்துறையின் கோரிக்கையை ஏற்று வனப்பகுதியை விட்டு வெளியே வந்து குடியிருந்து வருகிறோம்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக தாங்கள் 14 வகையான பொருட்களை மட்டும் மலைப்பகுதிக்குள் சென்று எடுப்பதற்கு எழுத்து மூலமாக அனுமதி வழங்கப்பட்டது. அதன் பின்னர் நாங்களும் மலைக்குள் சென்று 14 வகையான பொருட்களை எடுத்து விற்பனை செய்து வருமானம் ஈட்டி வந்தோம்.
இந்தநிலையில் கடந்த 11-ந் தேதி வனத்துறையினர், விலங்குகள் நடமாட்டம் இருப்பதால் மலைவாழ் மக்கள் மலை பகுதிக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறினர். ஆதலால் நாங்கள் வருமானம் இன்றி தவித்து வருகிறோம். எனவே நாங்கள் மீண்டும் வனப்பகுதிக்குள் பொருட்கள் சேகரித்து வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனுமதி வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story