4 பேருக்கு கொரோனா: மதுரை பரவை மார்க்கெட் மூடப்பட்டது


4 பேருக்கு கொரோனா: மதுரை பரவை மார்க்கெட் மூடப்பட்டது
x
தினத்தந்தி 16 Jun 2020 4:30 AM IST (Updated: 16 Jun 2020 8:49 AM IST)
t-max-icont-min-icon

வியாபாரிகள் உள்பட 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து மதுரை பரவை மார்க்கெட் மூடப்பட்டது.

மதுரை,

மதுரை பரவை அருகே ஒருங்கிணைந்த காய்கறி மொத்த மார்க்கெட் உள்ளது. மதுரை மட்டுமின்றி தென் மாவட்டங்கள் முழுவதிற்கும் இந்த மார்க்கெட்டில் இருந்து தான் காய்கறிகள் கொண்டு செல்லப்படுகிறது. எனவே இந்த மார்க்கெட்டிற்கு தினமும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வருவார்கள். இதனால் அங்கு கூட்டம் அலைமோதும். எனவே ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதில் இருந்து பரவை மார்க்கெட்டிற்கு பல்வேறு கெடுபிடிகள் விதிக்கப்பட்டன. அங்கிருந்த காய்கறிகள் பாத்திமா கல்லூரி மற்றும் பரவை மார்க்கெட்டு அருகில் உள்ள காலி இடங்களுக்கு இடப்பெயர்வு செய்யப்பட்டன.

இதனால் கூட்டம் சற்று கட்டுப்படுத்தப்பட்டது. மேலும் மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சியும் இணைந்து அங்கு தீவிர ரோந்து பணியை மேற்கொண்டன. கலெக்டர் வினய், மாநகராட்சி கமிஷனர் விசாகன் ஆகியோர் அடிக்கடி ஆய்வு செய்தனர். சமூக இடைவெளி கடைபிடிக்காத 52 கடைகளின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டன.

இதுபோன்ற கெடுபிடிகளால் அங்கு கொரோனா பாதிப்பு இல்லாத நிலை இருந்தது. மேலும் சென்னை கோயம்பேடு மார்க்கெட் போன்ற நிலை வந்து விடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் தீவிரப்படுத்தப்பட்டு இருந்தது. இந்தநிலையில் ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து மதுரையின் அனைத்து பகுதிகளிலும் கெடுபிடி தளர்ந்தது. பரவை மார்க்கெட்டிலும் கட்டுப்பாடு இல்லாததால் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

இந்தநிலையில் பரவை மார்க்கெட்டில் உள்ள 2 வியாபாரிகள், 2 சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்தொடர்ச்சியாக பரவை மார்க்கெட் மூடப்பட்டது. அதாவது மார்க்கெட்டில் இருந்த அனைத்து கடைகளும் வெளியே உள்ள மைதானத்தில் அமைக்கப்பட்டு உள்ளது. கட்டிடங்கள் அனைத்திலும் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது. வருகிற 22-ந் தேதி வரை கடைகள் அடைக்கப்பட்டு இருக்கும். அதன்பின் தான் பரவை மார்க்கெட் திறக்கப்படும் என்று ஒருங்கிணைந்த காய்கறி மார்க்கெட் மற்றும் அழுகும் பொருட்கள் வியாபாரிகள் சங்க தலைவர் மனுவேல் ஜெயராஜ் கூறினார்.

Next Story