கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு கொரோனா தொற்று - கோவை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதி
கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி,
தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை தவிர்க்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இருப்பினும் கட்டுப்படுத்த முடியவில்லை.
இந்த கொரோனா வைரஸ் சாமானியனை மட்டுமின்றி ஐ.ஏ.எஸ். அதிகாரி, போலீஸ் உயர் அதிகாரிகள் என அனைத்து தரப்பினரையும் விட்டு வைக்காமல் தாக்கி வருகிறது. அந்த வகையில் கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டையும் கொரோனா தாக்கியுள்ளது.
அதன் விவரம் வருமாறு:-
மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்தவர் ஜெயசந்திரன் (வயது 52). இவர் கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு பணி முடிந்ததும், கள்ளக்குறிச்சியில் உள்ள முகாம் அலுவலகத்துக்கு சென்றார். இந்த நிலையில் நள்ளிரவில் அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.
இது குறித்த தகவலின் பேரில் டாக்டர்கள் முகாம் அலுவலகத்துக்கு சென்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயசந்திரனுக்கு சிகிச்சை அளித்தனர். பின்னர் அவரின் ரத்த மாதிரி, உமிழ்நீர் ஆகியவற்றை சேகரித்து கொரோனா பரிசோதனைக் காக டாக்டர்கள் அனுப்பி வைத்தனர். இந்த பரிசோதனை முடிவு நேற்று வெளிவந்தது.
இதில் போலீஸ் சூப்பிரண்டு ஜெயசந்திரனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து அவர் நேற்று மதியம் 12 மணிக்கு சிகிச்சைக்காக வேன் மூலம் கோவை தனியார் மருத்துவமனைக்கு புறப்பட்டு சென்றார். இதனிடையே போலீஸ் சூப்பிரண்டு தங்கியிருந்த முகாம் அலுவலகம் பூட்டப்பட்டது.
மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வேலை பார்த்து வந்த தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் என 15-க்கும் மேற்பட்டவர்களின் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு கொரோனா பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. போலீஸ் சூப்பிரண்டு ஜெயசந்திரனை அலுவல் தொடர்பாக மாவட்ட போலீசார் பலர் நேரில் சந்தித்து பேசியதாக தெரிகிறது.
இதனால் அவர்கள் தங்களுக்கும் கொரோனா தொற்று இருக்குமோ? என அச்சத்தில் உள்ளனர். சின்னசேலத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை கடந்த 3 நாட்களுக்கு முன்பு கலெக்டர் கிரண்குராலா பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டும் உடன் சென்றார். இந்த ஆய்வின்போது போலீஸ் சூப்பிரண்டுக்கு தொற்று பரவியதா? அல்லது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட யாரேனும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயசந்திரனை சந்தித்து பேசியதால் பரவியதா? என்பது குறித்து தெரியவில்லை.
கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயசந்திரன் கொரோனா காரணமாக சிகிச்சைக்காக சென்றதால், அவரது பணியை விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகிறார்.
Related Tags :
Next Story