பல்லடத்தில், பாலியல் பலாத்காரம் செய்து இளம்பெண்ணின் கருக்கலைப்பு - வாலிபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் நிலையம் முற்றுகை


பல்லடத்தில், பாலியல் பலாத்காரம் செய்து இளம்பெண்ணின் கருக்கலைப்பு - வாலிபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் நிலையம் முற்றுகை
x
தினத்தந்தி 16 Jun 2020 2:03 PM IST (Updated: 16 Jun 2020 2:03 PM IST)
t-max-icont-min-icon

பல்லடத்தில் பாலியல் பலாத்காரம் செய்து இளம்பெண்ணின் கருக்கலைப்பு செய்யப்பட்ட விவகாரத்தில் வாலிபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உறவினர்கள் மகளிர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

திருப்பூர், 

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர் திருமணம் ஆகி கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்தார். இந்த பெண்ணுக்கும் மத்தநாயக்கன்பாளையத்தை சேர்ந்த 26 வயது வாலிபருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அந்த வாலிபருக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து மனைவி, குழந்தை உள்ளனர்.

இவர்கள் 2 பேரின் பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. அந்த வாலிபர் இளம்பெண்ணை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி உல்லாசம் அனுபவித்ததாக கூறப்படுகிறது. இதில் அந்த இளம்பெண் கர்ப்பம் அடைந்தார். தான் கர்ப்பம் அடைந்த தகவலை பதற்றத்துடன் அந்த வாலிபரிடம் இளம் பெண் தெரிவித்துள்ளார். அதற்கு அவர் கவலைப்படாதே. நான் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறி அந்த பெண்ணை ஊரின் காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு யாருக்கும் தெரியாமல் மஞ்சள் கயிற்றை அந்த பெண்ணுக்கு அவர் கட்டி உள்ளார். இன்று முதல் நீ என் மனைவி. கவலைப்படாதே. வீட்டில் பிரச்சினை முடிந்தவுடன் அழைத்து செல்வதாக வாக்குறுதி கொடுத்து உள்ளார்.

இதையடுத்து அந்த வாலிபர் அந்த பெண்ணை அவரது வீட்டில் விட்டு விட்டு தன்னுடைய வீட்டுக்கு சென்று விட்டார். பின்னர் தான் தாலி கட்டிய பெண் வயிற்றில் வளரும் குழந்தையால் பின்னாளில் பிரச்சினை வரக்கூடும் என்பதை உணர்ந்த அந்த வாலிபர் நைசாக அந்த பெண்ணை அழைத்து பேசி உள்ளார். இப்போதைக்கு நீ குழந்தை பெற்றுக்கொண்டால் ஊர் உலகம் தவறாக பேசும். எனவே அதை கலைத்து விடுவோம் என்று கூறி அவரை பல்லடம் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று உள்ளார்.

அங்கு பெண்ணுக்கு உடல்நிலை சரியில்லை என்று காரணம் கூறி கருவை கலைத்து உள்ளார். அதன்பிறகு அந்த வாலிபர் அந்த பெண்ணை வீட்டில் கொண்டு வந்து விட்டு சென்று விட்டார். அதை தொடர்ந்து அந்த பெண், வாலிபரை தொடர்பு கொண்டும் அவர் பேச மறுத்ததால் தன்னை ஏமாற்றி விட்டதாக உணர்ந்தார்.

இதைத்தொடர்ந்து அந்த பெண் பல்லடம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தன்னை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்து எனது கருவை சம்பந்தப்பட்ட வாலிபர் கலைத்து விட்டார். அவரால் நான் உடலளவிலும், மனதளவிலும் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளேன். எனவே சம்பந்தப்பட்ட நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த 12-ந்தேதி புகார் கொடுத்தார். இந்த புகாரை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் இளம்பெண்ணின் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டி அந்த பெண்ணின் உறவினர்கள் மற்றும் ஆதித்தமிழர் ஜனநாயக பேரவையினர் நேற்று பல்லடம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இது தொடர்பாக முற்றுகையிட்டவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அந்த வாலிபர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து அவர்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.

Next Story