கடலூர் மாவட்டத்தில், மேலும் 26 பேருக்கு கொரோனா உறுதி - பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 557 ஆக உயர்வு
கடலூர் மாவட்டத்தில் மேலும் 26 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 557 ஆக உயர்ந்தது.
கடலூர்,
கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 531 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். நேற்று பரிசோதனை முடிவுகள் வந்தது. அதில் மாவட்டம் முழுவதும் 26 பேருக்கு கொரோனா உறுதியானது.
அதில், நெய்வேலி அருகே வடக்குத்து பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த கணவன், மனைவி, அவர்களது 9 வயது மகன், 4 வயது மகளுக்கு கொரோனா உறுதியானது. இவர்கள் சென்னையில் இருந்து வடக்குத்து பகுதிக்கு வந்தவர்கள்.
இவர்களை போல சென்னையில் இருந்து நல்லூர் பகுதிக்கு திரும்பிய 2 பேர், கம்மாபுரம் வந்த 39 வயது பெண், கீரப்பாளையத்தை சேர்ந்த 65 வயது முதியவர், குறிஞ்சிப்பாடி பகுதியை சேர்ந்த 65 வயது முதியவர், குமராட்சி பகுதிக்கு வந்த 24 வயது வாலிபர், 32 வயது வாலிபர், மங்களூர் பகுதிக்கு வந்த 33 வயது வாலிபர், 29 வயது வாலிபர், 57 வயது ஆண், கம்மாபுரம் பகுதிக்கு வந்த 44 வயது பெண், பரங்கிப்பேட்டைக்கு வந்த 42 வயது ஆண், 38 வயது பெண், 34 வயது வாலிபர், விருத்தாசலம் பகுதிக்கு வந்த 24 வயது ஆணுக்கும் கொரோனா உறுதியானது. இவர்களை தவிர்த்து குமராட்சியை சேர்ந்த 48 வயது பெண், குறிஞ்சிப்பாடியை சேர்ந்த 29 வயது ஆண், 34 வயது பெண், குமராட்சி பகுதியை சேர்ந்த 3 பேர் நுரையீரல் தொற்று காரணமாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்கள் 3 பேருக்கும் கொரோனா உறுதியாகி உள்ளது.
மேலும் குமராட்சி பகுதியில் கொரோனா பாதிக்கப்பட்டவரின் தொடர்பில் இருந்த 16 வயது சிறுவன் என மொத்தம் 26 பேர் பாதிக்கப்பட்டனர்.
இதன் மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 557 ஆக உயர்ந்தது. நேற்று 4 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். மொத்தம் 467 பேர் குணமடைந்து, வீடு திரும்பி உள்ளனர்.
மீதியுள்ள 87 பேரில் 35 பேர் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், 50 பேர் கடலூர் அரசு மருத்துவமனையிலும், 2 பேர் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாவட்டத்தில் இது வரை 14 ஆயிரத்து 548 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 557 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. 13 ஆயிரத்து 653 பேருக்கு பாதிப்பு இல்லை. 338 பேரின் முடிவுகள் வர வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story