எல்லை பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள சோதனை சாவடிகளை கலெக்டர் ஆய்வு


எல்லை பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள சோதனை சாவடிகளை கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 17 Jun 2020 4:00 AM IST (Updated: 17 Jun 2020 12:07 AM IST)
t-max-icont-min-icon

எல்லை பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள சோதனை சாவடிகளை கலெக்டர் ஆய்வு.

அரியலூர்,

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஊராட்சி ஒன்றியம், கொள்ளிடம் பாலத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள சோதனை சாவடியினை மாவட்ட கலெக்டர் ரத்னா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது அவர் தெரிவித்ததாவது:-

கொரோனா வைரஸ் குறித்து பொதுமக்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் பொதுமக்கள் முககவசம் அணிவது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. நோய் தொற்று ஏற்படாமல் இருக்க தனிநபர் இடைவெளியை பின்பற்ற வேண்டும். மேலும் கொரோனா வைரஸ் நோய் தொடர்பாக முகாம்களில் தனிமைபடுத்தப்பட்டவர்களுக்கு அனைத்து அத்தியாவசிய தேவைகளும் கிடைப்பதற்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அவர்களையும் மருத்துவ குழுவின் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அரியலூர் மாவட்ட எல்லையில் 10 சோதனை சாவடிகளும், மாவட்டத்திற்குள்ளான பகுதிகளில் 12 சோதனை சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன. அவ்வழியாக செல்லும் வாகனங்களை காவல்துறையினர், மருத்துவக்குழுவினர் மற்றும் வருவாய்த்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். அரியலூர் மாவட்டத்திற்கு வருகை தரும் வாகனங்களை சோதனை செய்து அதில் வருபவர்களுக்கு ஏதேனும் நோய் தொற்று குறித்த அறிகுறிகள் உள்ளதா? என மருத்துவக்குழு பரிசோதனை செய்த பின்னரே அவர்கள் மாவட்டத்திற்குள்ளே அனுமதிக்கப்படுவார்கள். வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டத்திலிருந்து அரியலூர் மாவட்ட எல்லை வழியாக பிற மாவட்டங்களுக்கு செல்லும் வாகனங்களில் செல்பவர்கள் முறையான இ-பாஸ் பெற்று வருகிறார்களா? என்று உறுதி செய்த பின்னரே வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். மேலும், அரியலூர் மாவட்டத்திற்கு வருபவர்களில் யாருக்காவது நோய் தொற்று குறித்து அறிகுறிகள் இருந்தால் அவர்களை உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் தங்கவைக்க உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. அவர்களுக்கு தேவையான மருத்துவ பரிசோதனை மற்றும் தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்படுகிறது. பொதுமக்கள் தங்கள் ஊர்களுக்கு வெளியூர்களிலிருந்து யாராவது உரிய அனுமதி பெறாமல் வந்திருந்தால் உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஆய்வின் போது கோட்டாட்சியர் பாலாஜி உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story