வெளி மாவட்டங்களில் இருந்து நெல்லைக்கு வந்தவர்களுக்கு 2-வது கட்டமாக வீடு வீடாக சென்று கொரோனா பரிசோதனை - கலெக்டர் ஷில்பா ஆய்வு செய்தார்
வெளி மாவட்டங்களில் இருந்து நெல்லைக்கு வந்தவர்களுக்கு 2-வது கட்டமாக வீடு வீடாக சென்று கொரோனா பரிசோதனை செய்வதை கலெக்டர் ஷில்பா ஆய்வு செய்தார்.
நெல்லை,
நெல்லை மாவட்டத்தில் சுகாதாரத்துறையினர் வெளி மாநிலம், வெளி மாவட்டங்களில் இருந்து வந்தவர்களின் வீடுகளுக்கு சென்று 2-வது கட்டமாக மருத்துவ கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.
மேலும் காய்ச்சல், சளி இருக்கிறதா? எனவும் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. பூலம் கிராமத்தில் நேற்று நடந்த கொரோனா பரிசோதனை பணியை கலெக்டர் ஷில்பா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
நெல்லை மாவட்டத்தில் உள்ள 82 கிராம பஞ்சாயத்து, 11 பேரூராட்சிகள், 2 நகரசபைகள் மற்றும் நெல்லை மாநகராட்சி பகுதிகளில் சுகாதார அலுவலர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள், உள்ளாட்சித்துறை அலுவலர்கள், காவல் துறையினர் ஒன்றாக இணைந்து வீடு வீடாக சென்று வெளியூர், வெளி மாநிலத்தில் இருந்து வந்தவர்களை பார்த்து 2-வது கட்டமாக கொரோனா பரிசோதனை நடத்தி வருகிறார்கள். கர்ப்பிணிகள், சர்க்கரை நோய், இருதய நோய் உள்ளவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து சோதனை செய்யப்படுகிறது.
அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள், சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த வார இறுதிக்குள் வெளியூர், வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் அனைவருக்கும் 2-வது கட்ட பரிசோதனை முடிவடைந்து விடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் வரதராஜன், வட்டார மருத்துவ அலுவலர் குருநாதன், தாசில்தார் நல்லையா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரம்மநாயகம், குமரன் ஆகியோர் உடனிருந்தனர்.
விழிப்புணர்வு வாகன பிரசாரம்
நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் தன்னார்வ அமைப்புகளின் மூலம் கொரோனா விழிப்புணர்வு வாகன பிரசாரம் நெல்லை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த விழிப்புணர்வு கலைநிகழ்ச்சியை நேற்று கலெக்டர் அலுவலகத்தில் வைத்து கலெக்டர் ஷில்பா கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள், பயிற்சி உதவி கலெக்டர்கள் சிவகுருபிரபாகரன், அலர்மேல்மங்கை, அனிதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story