இ-பாஸ் கிடைக்காததால் கேரள எல்லையில் நடந்த சங்கரன்கோவில் என்ஜினீயர் திருமணம்
இ-பாஸ் கிடைக்காததால் கேரள எல்லையில் நேற்று சங்கரன்கோவிலை சேர்ந்த என்ஜினீயருக்கு திருமணம் நடந்தது.
தென்காசி,
கொரோனா பிரச்சினையால் தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டும் அரசு இ-பாஸ் வழங்கி வருகிறது. அப்படி இருந்தும் பல நேரங்களில் திருமணம் போன்ற அத்தியாவசிய தேவைக்கும் இ-பாஸ் விண்ணப்பிக்கும்போது அது நிராகரிக்கப்படுகிறது.
இந்த நிலையில் ஏற்கனவே சங்கரன்கோவில் வெங்கடாசலபுரம் வடக்கு தெருவை சேர்ந்த அரவிந்த் (வயது 29) என்ற என்ஜினீயருக்கும், கேரள மாநிலம் பத்தனம் திட்டா மாவட்டம் கும்பளே என்ற பகுதியை சேர்ந்த பிரசாந்தி (23) என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. திருமண நாள் வந்தபோது அவர்களுக்கு இ-பாஸ் கிடைக்கவில்லை.
திருமணம்
இந்த சூழலில் கேரளாவில் இருந்து மணப்பெண்ணும், சங்கரன்கோவிலில் இருந்து மணமகனும் கேரள எல்லை பகுதியான ஆரியங்காவு சோதனைச்சாவடி அருகில் உறவினர்களுடன் நேற்று வந்தனர். அவர்கள் அனைவரும் முககவசம் அணிந்திருந்தனர்.
அங்குள்ள நாராயண குரு மந்திரம் என்ற இடத்தில் அவர்களது திருமணம் எளிமையாக நடந்தது. இந்த திருமணத்தில் குறைந்த எண்ணிக்கையிலான உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். இதையடுத்து அதிகாரிகள் உதவியுடன் மணமக்கள் இருவரும் சங்கரன்கோவில் புறப்பட்டு சென்றனர்.
Related Tags :
Next Story