வக்பு வாரிய சொத்து முறைகேடு குறித்த விசாரணை அறிக்கை வருகிற சட்டசபை கூட்டத்தில் தாக்கல் செய்யப்படும் முதல்-மந்திரி எடியூரப்பா தகவல்


வக்பு வாரிய சொத்து முறைகேடு குறித்த விசாரணை அறிக்கை வருகிற சட்டசபை கூட்டத்தில் தாக்கல் செய்யப்படும் முதல்-மந்திரி எடியூரப்பா தகவல்
x
தினத்தந்தி 17 Jun 2020 5:24 AM IST (Updated: 17 Jun 2020 5:24 AM IST)
t-max-icont-min-icon

வக்பு வாரிய சொத்து முறைகேடு குறித்த விசாரணை அறிக்கை வருகிற சட்டசபை கூட்டத்தில் தாக்கல் செய்யப்படும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா கூறினார்.

பெங்களூரு, 

சிறுபான்மையினர் நலத்துறை, வக்பு வாரியம், ஜவுளித்துறை தொடர்பான ஆலோசனை கூட்டம் முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் எடியூரப்பா பேசியதாவது:-

வக்பு வாரிய சொத்துகளில் நடந்துள்ள முறைகேடு குறித்து அன்வர் மணிப்பாடி அறிக்கை அடிப்படையில் லோக்அயுக்தா விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. லோக்அயுக்தா தனது இடைக்கால விசாரணை அறிக்கையை வழங்கியது. இந்த விசாரணை அறிக்கை வருகிற சட்டசபை கூட்டத்தில் தாக்கல் செய்யப்படும். இதற்கு மந்திரிசபை ஒப்புதல் வழங்கியுள்ளது.

ஹஜ் யாத்திரை

கொரோனா நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் நடப்பு ஆண்டில் ஹஜ் யாத்திரையை தொடங்குவது குறித்து சவுதி அரேபியாவிடம் இருந்து இதுவரை எந்த தகவலும் வரவில்லை. அதனால் இந்த யாத்திரைக்கு முன்பணம் செலுத்தியவர்கள், அதை திரும்ப பெற அனுமதிக்கப்பட்டுள்ளது. நெசவாளர்கள் சம்மான் திட்டத்தின் கீழ் நெசவாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.2,000 உதவித்தொகை வழங்கப்படும்.

ரூ.14.15 கோடி மதிப்புள்ள கைத்தறி உற்பத்தி, ரூ.942.66 கோடி மதிப்புள்ள விசைத்தறி உற்பத்தி ஆடைகள் விற்பனை ஆகாமல் உள்ளது. இதில் விசைத்தறியில் உற்பத்தி செய்யப்பட்ட புடவைகளை கொள்முதல் செய்து அங்கன்வாடி ஊழியர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த மே மாதம் தற்கொலை செய்து கொண்ட 3 நெசவாளர்களின் குடும்பங்களுக்கு நிவாரணமாக தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் ஜவுளி மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மந்திரி ஸ்ரீமந்த் பட்டீல், வக்பு மற்றும் ஹஜ் மந்திரி பிரபுசவான், தலைமை செயலாளர் விஜயபாஸ்கர் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Next Story