திருச்சியில் ரூ.1 கோடியே 85 லட்சத்தில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர், சர்.ஏ.டி.பன்னீர்செல்வம், தியாகராஜ பாகவதருக்கு மணிமண்டபம்


திருச்சியில் ரூ.1 கோடியே 85 லட்சத்தில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர், சர்.ஏ.டி.பன்னீர்செல்வம், தியாகராஜ பாகவதருக்கு மணிமண்டபம்
x
தினத்தந்தி 17 Jun 2020 6:11 AM IST (Updated: 17 Jun 2020 6:11 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் ரூ.1 கோடியே 85 லட்சத்தில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர், சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் மற்றும் எம்.கே.தியாகராஜ பாகவதர் ஆகியோருக்கு மணிமண்டபம் கட்டுவதற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.

திருச்சி,

திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகில் ரூ.1 கோடியே 85 லட்சத்து 34 ஆயிரம் மதிப்பீட்டில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர், நீதிக்கட்சியின் வைரத்தூண் என்று அழைக்கப்பட்ட சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் மற்றும் திரைப்படத்துறையிலும், பாரம்பரிய இசைத்துறையிலும் பன்முக பங்களிப்பை அளித்து புகழ்பெற்ற எம்.கே.தியாகராஜ பாகவதர் ஆகியோரது முழு திருவுருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபங்கள் அமைக்கப்படும் என்றும், அதில் ஒரு நூலகமும் அமைக்கப்படும் என 14.2.2019 அன்று சட்டபேரவை விதி எண் 110-ன் கீழ் சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அதன்படி மூவருக்கும் மணிமண்டபம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.

கலெக்டர் நன்றி

அதை திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் இருந்து கலெக்டர் எஸ்.சிவராசு வரவேற்று நன்றி தெரிவித்தார். பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சிலை ரூ.99 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பீட்டிலும், சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் சிலை ரூ.43 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பீட்டிலும் மற்றும் எம்.கே.தியாகராஜ பாகவதர் சிலை ரூ.42 லட்சத்து 69 ஆயிரம் மதிப்பீட்டிலும் அமைக்கப்படுகிறது. மூவரின் பிறந்தநாள் அன்று அரசு சார்பில் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும்.

இதேபோல் கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளைக்கு ரூ.92 லட்சத்து 27 ஆயிரம் மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ள முழு உருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம், நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் வட்டம் வடகரையாத்தூர் கிராமம் ஜேடர்பாளையம் காவிரி ஆற்றின் இடக்கரையில் அல்லாள இளைய நாயகருக்கு ரூ.21 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ள முழு உருவச்சிலையுடன் கூடிய குவிமாட மண்டபத்துக்கும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

தலைமை செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் வளர்மதி, தலைமைச் செயலாளர் சண்முகம், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் மகேசன் காசிராஜன், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குனர் சங்கர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story