புதுவை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரி மாணவர்களுக்கு இறுதி செமஸ்டர் தேர்வு ரத்து


புதுவை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரி மாணவர்களுக்கு இறுதி செமஸ்டர் தேர்வு ரத்து
x
தினத்தந்தி 17 Jun 2020 6:35 AM IST (Updated: 17 Jun 2020 6:35 AM IST)
t-max-icont-min-icon

புதுவை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் இறுதி செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. உள்மதிப்பீடு அடிப்படையில் மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி,

புதுவை மத்திய பல்கலைக்கழகத்தின் கீழ் மருத்துவம், என்ஜினீயரிங், பல் மருத்துவம், ஆயுர்வேதம், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் என 92 அரசு, தனியார் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படிக்கின்றனர்.

கொரோனா தொற்று பரவல் காரணமாக புதுவையில் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. கடந்த 1-ந் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு படிப்படியாக தளர்த்தப்பட்ட நிலையில், ஜூலை மாதத்தில் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளுக்கு தேர்வுகளை நடத்த முடிவு செய்யப்பட்டு இருந்தது.

இந்தநிலையில் பல்கலைக்கழக நிர்வாக கவுன்சில் கூடி இணைப்பு கல்லூரிகளில் இறுதி ஆண்டு தவிர்த்து மற்ற மாணவர்களுக்கு பல்கலைக்கழக தேர்வுகளை ரத்து செய்து அறிவித்தது.

நேற்று மீண்டும் புதுவை பல்கலைக்கழக நிர்வாக கவுன்சில் கூட்டம் நடந்தது. இதில் கல்லூரிகளில் படித்து வரும் இறுதி ஆண்டு மாணவர்களுக்கும் தேர்வை ரத்து செய்வது எனவும், உள்மதிப்பீடு அடிப்படையில் இறுதி செமஸ்டர் தேர்வு முடிவை வெளியிடுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து புதுவை பல்கலைக்கழக தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் லாசர் கல்லூரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புதுவை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு எழுத இருந்த மாணவர்களுக்கும் பல்கலைக்கழக தேர்வுகள் ரத்து செய்யப்படுகிறது. மாணவர்கள் பெற்ற உள்மதிப்பீடு மற்றும் தொடர் உள்மதிப்பீட்டின் அடிப்படையில் மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு ஏப்ரல், மே மாத செமஸ்டர் தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்படும்.

இறுதியாண்டு மற்றும் இறுதி செமஸ்டரின் வழக்கமான தேர்வுகளுக்கும், அரியர் தேர்வுகளுக்கும் இந்த நடைமுறை கடைப்பிடிக்கப்படும். விதிமுறைக்குட்பட்டு மாணவர்களுக்கு உள்மதிப்பீட்டு மதிப்பெண்களை கல்லூரிகள் வழங்க வேண்டும். தேர்வுக்கு விண்ணப்பித்தல், கட்டணம் செலுத்துதல், குறைந்தபட்ச வருகை பதிவேடு உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளையும் கடைப்பிடிக்கவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதுவை பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி, ஆராய்ச்சி பாடப்பிரிவுகளில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். அவர்களுக்கு ஏப்ரல், மே மாதத்திற்கான செமஸ்டர் தேர்வை ரத்து செய்வது தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகம் ஆலோசனை நடத்தி வருகிறது. அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

Next Story