சென்னையில் இருந்து இ-பாஸ் இல்லாமல் வருபவர்களின் விவரங்களை தெரிவிக்க வேண்டும் - சுகாதாரத்துறை துணை இயக்குனர் தகவல்
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இ-பாஸ் இல்லாமல் சென்னையில் இருந்து வருபவர்களின் விவரங்களை மாவட்ட கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்க வேண்டும் என்று மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை,
சிவகங்கை மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் யசோதாமணி விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- சிவகங்கை மாவட்டத்தில் தற்போது கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள சுகாதாரத்துறையினர் மூலம் வெளிநாடு, வெளிமாநிலம் மற்றும் சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்து வரும் நபர்கள் குறித்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு அந்தந்த பரிசோதனை மையத்தில் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
இதில் சிவகங்கை மாவட்டத்தை சொந்த ஊராக கொண்ட மக்கள் தற்போது சென்னையில் இருந்து அதிகஅளவில் இங்கு வருகை தருகின்றனர். இவ்வாறு வரும் அவர்களின் விவரங்கள் குறித்து சுகாதாரத்துறை மற்றும் வருவாய்த்துறையின் மூலம் சேகரிக்கப்பட்டு அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் இவ்வாறு வரும் அவர்களில் பலர் இ-பாஸ் இல்லாமல் சென்னையில் இருந்து அங்குள்ள மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்காமல் சொந்த ஊர்களுக்கு வருகின்றனர். இதன் மூலம் தற்போது மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது.
இதேபோல் சென்னையில் இருந்து வரும் நபர்கள் தாங்களாகவே முன்வந்து கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அல்லது சுகாதாரத்துறை மற்றும் மாவட்ட கட்டுப்பாட்டு அறையின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077-ல் தொடர்பு கொண்டு அவர்களின் விவரம் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும் இவ்வாறு வெளிமாவட்டத்தில் இருந்து வரும் அவர்கள் வீட்டிலேயே 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். அத்துடன் சென்னையில் இருந்து வருபவர்களின் விவரங்களை பொதுமக்கள், தன்னார்வலர்கள் அல்லது அவர்களின் வீட்டின் அருகில் வசிப்பவர்கள் 1077 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். மேலும் பொதுமக்கள் அனைவரும் பொது இடங்களில் சமூக இடைவெளியை கண்டிப்பாக பின்பற்றி முககவசம் அணிய வேண்டும். இதுதவிர அரசு அறிவித்துள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் அனைத்தையும் முழுமையாக பின்பற்றி தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story