இலவச மின்சார திட்டம் தொடர வேண்டும் - கரும்பு விவசாயிகள் வலியுறுத்தல்
விவசாயிகளுக்கு இலவச மின்சார திட்டம் தொடர வேண்டும் என்று தமிழக, புதுவை கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
விழுப்புரம்,
தமிழக, புதுவை கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் கலிவரதன், செயலாளர் முருகையன் ஆகியோர் தலைமையில் கரும்பு விவசாயிகள் ரவி, ஜெயகோபி, நாகராஜன், ஜெயராமன், புருஷோத்தமன் உள்ளிட்டோர் நேற்று காலை விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
மத்திய அரசு கொண்டு வந்துள்ள மின்சார திருத்த சட்டத்தினால் மின் வினியோக நிறுவனங்கள் மின்சார உபயோக கட்டணத்தை விவசாயிகளிடம் இருந்து நேரடியாக வசூலித்துக்கொள்ள அதிகாரத்தை வழங்கியுள்ளதால் ஒவ்வொரு முறை மின் கட்டணம் கட்டும்போதும் குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை விவசாயிகள் கட்ட வேண்டியிருக்கும். அவ்வாறு விவசாயிகளால் கட்ட இயலாது. ஏற்கனவே கட்டுப்படியாகும் விலை கிடைக்காததால் விவசாயிகள் தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து கூட்டுறவு வங்கிகள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பெற்ற கடன்களை கூட கட்ட முடியாத சூழ்நிலையில் இருந்து வரும் நிலையில் இந்த மின்சார திருத்த சட்டத்தினால் உரிய நேரத்தில் மின் கட்டணத்தை கட்ட இயலாது.
இதன் காரணமாக மின் இணைப்பு துண்டிப்பு ஏற்பட்டு சரியான நேரத்தில் தண்ணீர் பாய்ச்ச இயலாமல் அதனால் விளைச்சலும் மிக கடுமையாக பாதிக்கப்பட்டு விவசாயிகள், விவசாயத்தை விட்டு வெளியேறும் சூழல் ஏற்பட்டுவிடும். இதன் மூலம் விவசாயிகளின் தற்கொலைகளும் பெருகும். ஆகவே மத்திய அரசின் மின்சார திருத்த சட்டத்தை ஏற்கக்கூடாது. விவசாயிகளுக்கு இலவச மின்சார திட்டம் தொடர வேண்டும். மின்சார மோட்டாருக்கு 1 எச்.பி. குதிரைத்திறனுக்கு ரூ.20 ஆயிரம் கூடுதல் டெபாசிட் தொகை செலுத்த தமிழக அரசு ஆணையை ரத்து செய்ய வேண்டும். 2019 வரை விவசாயிகள் இலவச மின் இணைப்பு கோரி அளித்த விண்ணப்பங்களுக்கு உடனடியாக மின் இணைப்பு செய்து தர வேண்டும். இதுகுறித்து மாநில அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர். மனுவை பெற்ற கலெக்டர் அலுவலக அதிகாரிகள், இதுகுறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக கூறினர்.
Related Tags :
Next Story