கூடுதல் இழப்பீடு கோரி உயர்மின் கோபுர பணிகளை தடுத்து விவசாயிகள் முற்றுகை - பல்லடம் அருகே பரபரப்பு
பல்லடம் அருகே கூடுதல் இழப்பீடு வழங்க கோரி உயர் மின்கோபுர பணிகளை விவசாயிகள் தடுத்து நிறுத்தி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர்,
மத்திய அரசின் பவர்கிரிட் நிறுவனமும், தமிழக அரசின் தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகமும் இணைந்து தமிழகத்தின் மேற்கு மற்றும் வடக்கு மாவட்டங்களில் உயர் மின் கோபுரங்கள் 12 மின் வழிப்பாதை வழியாக அமைக்கப்படுகின்றன. இந்த திட்டங்களை விவசாயிகளின் நிலங்கள் வழியாக செயல்படுத்தப்பட உள்ளன. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் உயர் கோபுரங்களுக்கு பதிலாக சாலையோரமாக கேபிள் மூலம் மின்சாரத்தை கொண்டு செல்லுமாறு வலியுறுத்தி கடந்த 3 ஆண்டுகளாக பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
தற்போது வரை முறையாக நில அளவீடு செய்து, நிலங்களுக்கான இழப்பீடு வழங்காத நிலையில் தற்போது மின்கோபுரம் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த செம்மிபாளையம், பெரும்பாளி உள்ளிட்ட கிராமங்களில் உயர் மின்கோபுரம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது.
கோவை மாவட்டத்தில் வழங்கப்பட்டதை போல் திருப்பூர் மாவட்டத்திலும் கூடுதல் இழப்பீட்டுத்தொகை வழங்க வேண்டும், பவர்கிரிட் நிறுவனத்தினர் முழுமையான இழப்பீடு வழங்கும்வரை பணிகளை நிறுத்திட வேண்டும் எனக்கூறி பெரும்பாளி பகுதி விவசாயிகள் நேற்றுகாலை உயர்மின் கோபுர திட்டப்பணிகளை தடுத்து நிறுத்தி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் தகவலறிந்தும் சம்பவ இடத்திற்கு வந்த தாசில்தார் சிவசுப்பிரமணியம், மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன், பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல் மற்றும் அதிகாரிகள் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அந்தப்பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை ஒட்டி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story