திருப்பூர் அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் மேலும் 13 பேர் சேர்ப்பு - கண்காணிப்பில் இருப்பவர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்வு
திருப்பூர் அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் மேலும் 13 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனால் கண்காணிப்பில் இருப்பவர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக மாவட்டம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கும் பணி, துப்புரவு பணி போன்றவை தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது. இது தவிர வெளிமாநிலம், வெளிநாடு, வெளிமாவட்டங்களில் இருந்து வருகிறவர்களும் கண்காணிக்கப்பட்டு வந்து கொண்டிருக்கிறார்கள்.
இதுதவிர மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்காக திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா வார்டும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வார்டில் கொரோனா பாதித்தவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். நேற்று முன்தினம் வரை 22 பேர் கண்காணிக்கப்பட்டு வந்தனர். நேற்று மேலும் 13 பேர் இதில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து அரசு மருத்துவமனை டாக்டர்கள் கூறியதாவது:-
திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா வார்டில் 22 பேர் கண்காணிக்கப்பட்டு வந்தனர். நேற்று மேலும் 13 பேர் சந்தேகத்தின் பேரில் இந்த வார்டில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக தற்போது கொரோனா வார்டில் இருப்பவர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.
இவர்களின் சளி மற்றும் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு, இந்த வார்டில் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். மருத்துவ பரிசோதனை முடிவுகள் வந்தவுடன் இது தொடர்பான தகவல்கள் தெரிவிக்கப்படும். இதில் கொரோனா தொற்று உறுதி செய்யப்படுகிறவர்கள் மேல்சிகிச்சைக்காக கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story