சம்பளம் வழங்கக்கோரி என்.டி.சி. மில் அலுவலகத்தை முற்றுகையிட்டு தொழிலாளர்கள் போராட்டம்


சம்பளம் வழங்கக்கோரி என்.டி.சி. மில் அலுவலகத்தை முற்றுகையிட்டு தொழிலாளர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 18 Jun 2020 3:30 AM IST (Updated: 18 Jun 2020 6:28 AM IST)
t-max-icont-min-icon

சம்பளம் வழங்கக்கோரி என்.டி.சி. மில் அலுவலகத்தை முற்றுகையிட்டு தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை,

தமிழகத்தில் கொரோனா தொற்று நோய் பரவலை தொடர்ந்து, என்.டி.சி. ஆலை நிர்வாகம் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய சம்பளத்தை பாதி சம்பளமாக வழங்க முடிவு செய்தது. இதற்கு தொழிலாளர் தரப்பில் எதிர்ப்பு வந்ததை தொடர்ந்து கடந்த 2-ந் தேதி கோவை மாவட்ட கலெக்டர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதில் மே மாதம் 17-ந் தேதி வரை முழு சம்பளமும், 18-ந் தேதி முதல் மீதி நாட்களுக்கு அரை சம்பளமும் வழங்குவது என நிர்வாகத் தரப்பில் ஒப்புக் கொள்ளப்பட்டது. ஆனால் அந்த ஒப்பந்தப்படி இதுவரை தொழிலாளர்களுக்கு வழங்கவேண்டிய சம்பளத்தை நிர்வாகம் வழங்கவில்லை.

இதைத் தொடர்ந்து கோவை பி.ஆர். நடராஜன் எம்.பி. தலைமையில் தொழிற்சங்கத் தலைவர்கள் எம்.ஆறுமுகம், சி.சிவசாமி (ஏ.ஐ.டி.யு.சி.), டி.எஸ்.ராஜாமணி (எச்.எம்.எஸ்.), சேவியர் (சி.ஐ.டி.யு-.), பார்த்தசாரதி, நாகேந்திரன் (எல்.பி.எப்.), தியாகராஜன் (எம்.எல்.எப்.), சீனிவாசன் (ஐ.என்.டி.யு.சி.), கோபால், ராமச்சந்திரன் (ஏ.டி.பி.), ரங்கசாமி (என்.டி.எல்.எப்.) நீலமேகம் (அம்பேத்கர் சங்கம்) மற்றும் தொழிலாளர்கள் கோவை காட்டூரில் உள்ள என்.டி.சி. தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

அப்போது அவர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களுடன் நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அதில் கலெக்டர் முன்னிலையில் இன்று (வியாழக்கிழமை) பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்வது என்று முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து தொழிலாளர்கள் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இந்த பேச்சுவார்த்தையில் தீர்வு காணப்பட்டால் என்.டி.சி.க்கு சொந்தமான மில்களில் பணியாற்றி வரும் சுமார் 6 ஆயிரம் தொழிலாளர்கள் பயன் பெறுவார்கள் என்று தொழிலாளர்கள் கூறினார்கள்.

Next Story