பெருந்துறை அருகே பரபரப்பு: ஏ.டி.எம். எந்திரத்தில் எலக்ட்ரானிக் சிப் பொருத்தி பணம் கொள்ளையடிக்க முயற்சி - போலீசார் விசாரணை


பெருந்துறை அருகே பரபரப்பு: ஏ.டி.எம். எந்திரத்தில் எலக்ட்ரானிக் சிப் பொருத்தி பணம் கொள்ளையடிக்க முயற்சி - போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 18 Jun 2020 11:49 AM IST (Updated: 18 Jun 2020 11:49 AM IST)
t-max-icont-min-icon

பெருந்துறை அருகே ஏ.டி.எம். எந்திரத்தில் எலக்ட்ரானிக் சிப் பொருத்தி பணம் கொள்ளையடிக்க முயற்சி நடந்தது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

பெருந்துறை, 

ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்த கணக்கம்பாளையத்தை சேர்ந்தவர் பிரதீப்குமார் (வயது 29). இவர் பெருந்துறையில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். நேற்று மதியம் 12 மணி அளவில், பணம் எடுப்பதற்காக பெருந்துறை பங்களா வீதியில் உள்ள ஒரு ஏ.டி.எம். மையத்துக்கு சென்றார்.

பின்னர் அந்த ஏ.டி.எம். எந்திரத்தில் தனது ஏ.டி.எம். அட்டையை சொருகினார். இதைத்தொடர்ந்து அதில் தனது ரகசிய குறியீட்டு எண்ணை அழுத்த முயற்சித்தார்.

அப்போது அந்த ஏ.டி.எம். எந்திரத்தில் உள்ள ஸ்கிரீன் பகுதியில் சிவப்பு நிறத்தில் ஒளி ஒன்று விழுந்து உள்ளது. இதனால் அவருக்கு திடீரென சந்தேகம் ஏற்பட்டது. உடனே அவர் எந்திரத்தில் ஒளி வந்த பகுதியை உற்று கவனித்தார். அப்போது அந்த எந்திரத்தின் ஸ்கிரீன் உள்ள இடத்துக்கு மேல்பகுதியில் ஒரு பொருள் ஒட்ட வைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் அதை எடுத்து பார்த்தார். அது ஏ.டி.எம். அட்டைகளின் தகவல்களை திருடும் எலக்ட்ரானிக் சிப் என தெரியவந்தது.

உடனே அவர் இதுகுறித்து பெருந்துறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஏ.டி.எம். எந்திரம் இருந்த பகுதியை பார்வையிட்டனர். மேலும் அந்த எலக்ட்ரானிக் சிப்பையும் கைப்பற்றி ஆய்வு செய்தனர். ஆய்வின்போது ஏ.டி.எம். அட்டையின் தகவல்களை ரகசியமாக திருடும் எலக்ட்ரானிக் சிப் அது என்பதை கண்டுபிடித்தனர். மேலும் இதுபற்றி பெருந்துறையில் உள்ள அந்த ஏ.டி.எம். மையத்தின் வங்கி நிர்வாகத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வங்கி நிர்வாகத்தினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மேலும் ஈரோட்டில் இருந்து நிபுணர் ஒருவரும் வரவழைக்கப்பட்டு அந்த எலக்ட்ரானிக் சிப் சோதனை செய்யப்பட்டது. அப்போது ஏ.டி.எம். அட்டையின் தகவல்களை திருடும் நவீன எலக்ட்ரானிக் சிப் என அந்த நிபுணர் உறுதி செய்தார்.

இதன் மூலம் எலக்ட்ரானிக் சிப்பில் பதிவாகும் ஏ.டி.எம். அட்டையின் ரகசிய தகவல்கள் மூலம் பணத்தை கொள்ளையடிக்க முயற்சி நடைபெற்று உள்ளது போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. இந்த எலக்ட்ரானிக் சிப்பை வைத்த மர்ம நபர் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அதுமட்டுமின்றி வங்கி ஏ.டி.எம்.மில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மற்றும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் பெருந்துறை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story