சென்னையில் இருந்து வருபவர்களை தடுக்க போலீசார் தீவிரம் - கங்கைகொண்டான் சோதனைச்சாவடியில் கண்காணிப்பு கேமராக்கள் அமைப்பு


சென்னையில் இருந்து வருபவர்களை தடுக்க போலீசார் தீவிரம் - கங்கைகொண்டான் சோதனைச்சாவடியில் கண்காணிப்பு கேமராக்கள் அமைப்பு
x
தினத்தந்தி 19 Jun 2020 4:45 AM IST (Updated: 18 Jun 2020 11:39 PM IST)
t-max-icont-min-icon

சென்னையில் முழு ஊரடங்கு இன்று முதல் அமல்படுத்தப்படுவதையொட்டி, அங்கிருந்து தென்மாவட்டங்களுக்கு படையெடுத்து வரும் மக்களை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. கங்கைகொண்டான் சோதனைச்சாவடியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.

நெல்லை,

கொரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்டு வருவதையொட்டி, வெளிமாநிலம் மற்றும் வெளிமாவட்டங்களில் உள்ளவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பி வருகிறார்கள். சென்னை, மும்பை உள்ளிட்ட நகரங்களில் இருந்து நெல்லை மாவட்டத்துக்கு மக்கள் ஏராளமானோர் வந்து கொண்டு இருக்கிறார்கள். கார், வேன் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் வரும் அவர்களை நெல்லை மாவட்ட எல்லையான கங்கைகொண்டான் வாகன சோதனைச்சாவடியில் நிறுத்தி சோதனை செய்யப்பட்டு வருகிறது.

சிப்காட் வளாகத்தில் உள்ள எல்காட் அலுவலகத்தில் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. அதில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால், அவர்கள் நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்படுகிறார்கள். தினந்தோறும் ஏராளமான வாகனங்கள் நெல்லை மாவட்டத்துக்கு வந்து கொண்டு இருக்கின்றன. இதனால் கொரோனா தொற்று பரவும் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.

தீவிர கண்காணிப்பு

இந்த நிலையில் சென்னையில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதனால் அங்குள்ள நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்ட மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு படையெடுத்து வருகிறார்கள். சிலர் இ-பாஸ் இல்லாமலும் நெல்லை மாவட்டத்துக்கு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து கங்கைகொண்டான் சோதனைச்சாவடியில் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர். வாகனங்கள் தப்பி மாவட்டத்துக்குள் நுழைவதை தடுக்க தடுப்பு வேலியில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு உள்ளது. இதேபோல் சோதனைச்சாவடி பகுதியை சுற்றிலும் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. மொத்தம் 7 கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன. மேலும் சோதனைச்சாவடியில் கூடுதல் போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

கிராமப்புற சாலைகள் அடைப்பு

மேலும், சோதனைச்சாவடிகளுக்கு செல்லாமல், கிராமப்புற சாலைகளின் வழியாக வாகனங்களில் செல்கிறவர்களைக் கட்டுப்படுத்தும் வகையில், கோவில்பட்டி அருகே ஏழாயிரம்பண்ணை, கயத்தாறு அருகே சன்னதுபுதுக்குடி, வடகரை, கரிசல்குளம் உள்ளிட்ட சாலைகள் மூடப்பட்டு உள்ளன. அங்கு தடுப்புகள் அமைத்து போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

மேலும் பல்வேறு இடங்களிலும் பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டியும், முள்வேலி அமைத்தும் பாதைகளை அடைத்துள்ளனர். அந்தந்த பகுதிகளில் உள்ள இளைஞர்கள், தன்னார்வலர்களும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முறையான அனுமதியுடன் இ-பாஸ் பெற்று, கொரோனா பரிசோதனை செய்து விட்டு வருகிறவர்களை மட்டுமே மாவட்டத்துக்குள் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

Next Story