தென்காசி அருகே, பெண்ணுக்கு கொரோனா; தடுப்புகள் வைத்து தெரு அடைப்பு


தென்காசி அருகே, பெண்ணுக்கு கொரோனா; தடுப்புகள் வைத்து தெரு அடைப்பு
x
தினத்தந்தி 19 Jun 2020 4:15 AM IST (Updated: 19 Jun 2020 1:47 AM IST)
t-max-icont-min-icon

தென்காசி அருகே பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் வசித்து வந்த தெரு தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டது. மேலும் அம்பையில் 2 வயது குழந்தைக்கு தொற்று உறுதியானது.

தென்காசி, 

தென்காசி அருகே மேலகரம் பகுதியில் உள்ள ஒரு தெருவை சேர்ந்த 40 வயது பெண்ணுக்கு 4 நாட்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டது. அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். 

பின்னர் மீண்டும் காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. உடனே அவர் சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் வசித்து வந்த தெருவை மேலகரம் பேரூராட்சி அதிகாரிகள் தடுப்புகளை கொண்டு அடைத்தனர்.

அந்த பெண் மேலகரம் பேரூராட்சியில் தற்காலிக ஊழியராக வேலை பார்த்தவர். வீடுகளுக்கு கொசுமருந்து கொடுக்க சென்று வந்துள்ளார். ஆனால் கடந்த 15 நாட்களாக அவர் பணிக்கு செல்லவில்லை. அவர் இருசக்கர வாகனத்தில் வீடு, வீடாக சென்று சேலை விற்று உள்ளார்.

அவர் எங்கெல்லாம் சென்று வந்தார் என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

குழந்தைக்கு தொற்று

மும்பையில் தனியார் கம்பெனியில் ஊழியராக பணியாற்றி வருபவரின் பெற்றோர், மனைவி மற்றும் 2 வயது பெண் குழந்தை ஆகியோர் காரில் அம்பை அருகே உள்ள ஊர்காடு பகுதிக்கு வந்திருந்தனர். இதையறிந்த சுகாதார துறையினர் அங்கு சென்று விசாரித்தனர்.

அப்போது அவர்கள் கங்கைகொண்டான் சோதனை சாவடிக்கு செல்லாமல் மற்றொரு வழியாக ஊர்காடு வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அதில் 2 வயது பெண் குழந்தைக்கு மட்டும் கொரோனா தொற்று உறுதியானது.

இதையடுத்து குழந்தையை நகராட்சி மற்றும் சுகாதார துறையினர் மீட்டு, நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மேலும் அந்த பகுதியில் கிருமி நாசினி தெளித்தல் உள்ளிட்ட சுகாதார பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

Next Story