12 நாள் முழு ஊரடங்கு; சென்னை புறநகர் பகுதியை ஒட்டி உள்ள மதுக்கடைகளில் கூட்டம் அலைமோதியது


12 நாள் முழு ஊரடங்கு; சென்னை புறநகர் பகுதியை ஒட்டி உள்ள மதுக்கடைகளில் கூட்டம் அலைமோதியது
x
தினத்தந்தி 18 Jun 2020 11:14 PM GMT (Updated: 2020-06-19T04:44:35+05:30)

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று முதல் 12 நாட்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட உள்ளது. இதையொட்டி சென்னை புறநகர் பகுதிகளை ஒட்டி உள்ள மதுக்கடைகளில் கூட்டம் அலைமோதியது.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவுவதை தடுக்க கடந்த மார்ச் 25-ந் தேதி முதல் வருகிற 30-ந் தேதி வரை 5 கட்டங்களாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் இந்த 4 மாவட்டங்களுக்கும் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 12 நாட்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுகிறது.

இதையொட்டி, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள மது பிரியர்கள் சென்னையை சுற்றி உள்ள மாவட்ட எல்லையில் உள்ள மதுக்கடைகளை தேடி மோட்டார் சைக்கிள், கார், ஆட்டோக்களில் பறந்தனர். அனைவரும் பெட்டி, பெட்டியாக மது பாட்டில்களை வாங்கி அள்ளிச் சென்றனர். சென்னையில் இருந்து திருநங்கைகளும் திருவள்ளூர் மாவட்டம் தாமரை பாக்கம் பகுதியில் உள்ள மதுக்கடையில் வந்து குவிந்ததுடன் மது பாட்டில்களையும் பெட்டி, பெட்டியாக வாங்கிச் சென்றனர்.

மது பிரியர்கள் ஏமாற்றம்

இன்னும் சில மது பிரியர்கள் அதிக அளவில் மது பாட்டில்களை கொண்டு சென்றால், போலீசார் பிடித்து விடுவார்களோ என்று எண்ணி மதுக்கடைக்கு அருகில் இருந்தே மதுவை ரசித்து, ருசித்தனர். எனினும், வாடிக்கையாளர்கள் விரும்பிய வகை மது பாட்டில்கள் அனைவருக்கும் கிடைக்கவில்லை. ஒரு சில கடைகளில் பீர் மட்டுமே இருந்தது.

பெரும்பாலான கடைகளில் பிராந்தி வகை மது பாட்டில்கள் இல்லவே இல்லை. இதனால் மது பிரியர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.


Next Story