கொரோனா பரவல் காரணமாக விநாயகர் சதுர்த்தியை எளிமையாக கொண்டாட வேண்டும் - முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே வேண்டுகோள்
மராட்டியத்தில் கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியை எளிமையாக கொண்டாட வேண்டும் என மாநில மக்களுக்கு முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மும்பை,
மராட்டியத்தில் கொண்டாடப்படும் பண்டிகைகளில் முதன்மையானது விநாயகர் சதுர்த்தி. நாட்டின் மற்ற இடங்களை காட்டிலும் இங்கு விநாயகர் சதுர்த்தி கோலாகலமாகவும், ஆடம்பரமாகவும் கொண்டாடப்படுகிறது. 10 நாள் கொண்டாடப்படும் இந்த விழாவின் போது மாநில தலைநகர் மும்பை பெருநகரம் உற்சாக வெள்ளத்தில் திளைக்கும். சர்வஜனிக் மண்டல்களிலும், வீடுகளிலும் மக்கள் சிறியது முதல் பிரமாண்டமான விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபடுவார்கள்.
பின்னர் பத்து நாட்களும் பூஜைகள், பஜனைகள் என விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் களை கட்டும். பின்னர் ஆனந்த சதுர்த்தி அன்று ஊர்வலமாக கடல், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு எடுத்து செல்லப்பட்டு விநாயகர் சிலைகள் கரைக்கப்படும். இந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 22-ந் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் தொடங்குகிறது.
முதல்-மந்திரி ஆலோசனை
ஆனால் தற்போது கொரோனா வைரசால் மராட்டியம் மிக மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியை வழக்கம் போல ஆடம்பரமாக கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
நேற்று முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் தொடர்பாக சர்வஜனிக் மண்டல் நிர்வாகிகளுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது:-
மராட்டியத்தில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் இன்னும் முடிவுக்கு வரவில்லை. எனவே இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியை கோலாகலம் மற்றும் ஆடம்பரமாக கொண்டாட வாய்ப்பு இல்லை. திருவிழாவின் போது கூட்டமாக திரளவோ அல்லது ஊர்வலமாக செல்லவோ கூடாது.
எளிமையாக கொண்டாட வேண்டும்
சமூக பொறுப்பை மனதில் வைத்து விநாயகர் சதுர்த்தியை எளிமையாக கொண்டாடி உலகுக்கு முன்மாதிரியாக திகழ வேண்டும்.
திருவிழாவை எவ்வாறு எளிமையாக கொண்டாட முடியும் என்பதை நாம்தீர்மானிக்க வேண்டும். மிஷன் பிகின் திட்டத்தின் கீழ் நாம் ஒவ்வொரு அடியையும் எச்சரிக்கையுடன் எடுத்து வைக்க வேண்டும். நமது கலாசாரம் மற்றும் மரபுகள் பாதிக்கப்பட கூடாது. ஆனால் நமது சமூக பொறுப்பையும் நினைவில் கொள்ள வேண்டும். அதற்கேற்ப நாம் திட்டங்களை வகுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கூட்டத்தின் போது, சட்டம் ஒழுங்கு குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் துணை முதல்-மந்திரி அஜித்பவார், மாநில உள்துறை மந்திரி அனில்தேஷ்முக் உள்ளிட்ட மந்திரிகள், போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story