அவமரியாதையாக நடத்திய வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலரை கண்டித்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் - 66 பேர் மீது வழக்கு
வேப்பூர் ஒன்றிய பா.ஜ.க. நிர்வாகிகளை அவமரியாதையாக நடத்தியதாக கூறி வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலரை கண்டித்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 66 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
குன்னம்,
பெரம்பலூர் மாவட்டம், பா.ஜ.க. வேப்பூர் ஒன்றிய தெற்குப்பகுதி தலைவர் தியாகராஜன், வடக்குப்பகுதி தலைவர் பழனிவேல் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் 10 பேர் நேற்று முன்தினம் மாலை 3 மணி அளவில் வேப்பூர் ஒன்றிய அலுவலகத்தில் வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) மரியதாசை சந்தித்து நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில் வேப்பூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சுகாதார பணிகள் சரிவர நடைபெறவில்லை எனவும், ஏழை விவசாயிகளுக்கு ஆடு, மாடு, கோழி வளர்ப்பு கொட்டகை அமைக்கும் பயனாளிகளை சரிவர தேர்வு செய்யவில்லை எனவும், அனைத்து ஊராட்சிகளில் உள்ள ஏழை மக்களுக்கு கான்கிரீட் வீடு வழங்கும் திட்டத்தையும், 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை சரியான முறையில் செயல்படுத்த வில்லை எனவும், குடிமராமத்து பணிகள் சரிவர செயல்படுத்த வில்லை எனவும் மற்றும் இதில் ஊழல் நடைபெறுவதாகவும் கூறி, இதில் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற கோரி கோரிக்கை விடுக்க சென்றார்களாம்.
அப்போது பாரதீய ஜனதா கட்சியினரை வட்டார வளர்ச்சி அலுவலர் நீண்ட நேரம் சந்திக்காமல் காலம் தாழ்த்தியதாகவும், பின்னர் இரவு 8.30 மணி அளவில் வட்டார வளர்ச்சி அலுவலர் வீட்டிற்கு செல்லும் போது பாரதீய ஜனதா கட்சி நிர்வாகிகளை சந்தித்து பா.ஜ.க. தேசியவாத கட்சி தான். எனவே உங்கள் கோரிக்கைகளை டெல்லியில் தான் கூற வேண்டும் எனவும், மத்திய அரசின் திட்டங்கள் இங்கு எதுவும் செயல்படுத்தப்படவில்லை எனவும், தமிழக அரசு திட்டங்கள்தான் செயல்படுத்தப்படுகிறது என்றும் கூறி அவர்களை அவமரியாதையாக நடத்தி ஜீப்பில் ஏறி வட்டார வளர்ச்சி அலுவலர் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
இந்த செயலை கண்டித்து வேப்பூர் ஒன்றிய பா.ஜ.க. சார்பில், வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மரியதாசை கண்டித்து ஒன்றிய அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு வேப்பூர் ஒன்றிய தலைவர்கள் தியாகராஜன், பழனிவேல் ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட செயலாளர் கண்ணன், பொது செயலாளர் வேலுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் திரைப்பட தணிக்கைக்குழு உறுப்பினர் சேகர் வட்டார வளர்ச்சி அலுவலரின் செயலை கண்டித்து பேசினார். ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய பொது செயலாளர்கள் பழனிமுத்து, இளஞ்செழியன், திருச்சி கோட்ட தொழிலர் நல கமிட்டி குழு உறுப்பினர் மணிவேல் உள்பட மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
ஊரடங்கையொட்டி அமலில் உள்ள விதிகளை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக குன்னம் போலீசார் பா.ஜ.க.வினர் 66 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story