திருச்சியில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உதவியாளர், வணிகர் சங்க நிர்வாகிக்கு கொரோனா - மேலும் 14 பேருக்கு தொற்று உறுதி


திருச்சியில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உதவியாளர், வணிகர் சங்க நிர்வாகிக்கு கொரோனா - மேலும் 14 பேருக்கு தொற்று உறுதி
x
தினத்தந்தி 18 Jun 2020 10:30 PM GMT (Updated: 19 Jun 2020 3:25 AM GMT)

திருச்சியில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உதவியாளர், வணிகர் சங்க நிர்வாகிக்கு கொரோனா உறுதியானது. மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருச்சி, 

தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் தனி உதவியாளர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர், திருச்சி கருமண்டபத்தை சேர்ந்தவர். அவருக்கு வயது 40. கடந்த 3 நாட்களுக்கு முன்பு சென்னையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் தனி உதவியாளரான இவரும் பங்கேற்றார். முன்னதாக அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் அவர் கருமண்டபம் வந்து விட்டார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் பரிசோதனை முடிவு வெளியானதில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் தனி உதவியாளருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அதைத்தொடர்ந்து அவர் திருச்சி அரசு ஆஸ்பத்திரி கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டார்.

மேலும் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் திருச்சி மாவட்ட நிர்வாகி ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, திருச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இவர், ஏற்கனவே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வரும் மாநில நிர்வாகியுடன் தொடர்பில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் தனி வார்டில் கொரோனா சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுபவர்களின் சளி, ரத்த மாதிரி பரிசோதனை செய்ததில் மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்கள் திருவெறும்பூர், பர்மா காலனி, தில்லைநகர், பொன்மலைப்பட்டி, கிருஷ்ணமூர்த்தி நகர், கீழபுலிவார்டு, புத்தாநத்தம் மற்றும் குப்பாங்குளம் பகுதியை சேந்ந்தவர்கள் ஆவர்.

இதற்கிடையே, திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்ற 6 பேர், பூரண குணமடைந்து நேற்று ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டு வீடு திரும்பினர்.

அவர்களில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 3 பேர், கரூர், சிவகங்கை மற்றும் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த தலா ஒரு நபர் ஆவர். இதன்மூலம் குணமாகி வீடு திரும்பியோர் எண்ணிக்கை 135-ல் இருந்து 141 ஆக உயர்ந்தது. தற்போதுவரை கொரோனா தொற்றுக்கு 62 பேர் தொடர்ந்து திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மணப்பாறை பகுதியில் கள்ளிப்பட்டியை சேர்ந்த இருவர், புத்தாநத்தம் பகுதியை சேர்ந்த ஒருவர், மணப்பாறையை சேர்ந்த ஒருவர், ராயம்பட்டியை சேர்ந்த ஒருவர் என மொத்தம் 5 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்நிலையில் நேற்று முன்தினம் புத்தாநத்தம் பகுதியை சேர்ந்த ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. அவர்கள், சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

Next Story