அதிகரித்து வரும் கொரோனா தொற்றால் கண்ணமங்கலம் பகுதியில் அடிக்கடி பஸ் போக்குவரத்து மாற்றம் - பயணிகள் கடும் அவதி
அதிகரித்து வரும் கொரோனா தொற்றால், கண்ணமங்கலம் பகுதியில் அடிக்கடி பஸ் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இதனால் பயணிகள் கடும் அவதிப்படுகின்றனர்.
கண்ணமங்கலம்,
கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்துக்கு இ-பாஸ் இல்லாமல் வரும் வெளிமாநில, பிற மாவட்ட நபர்கள் யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். அப்படி மீறி வருபவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் கந்தசாமி உத்தரவிட்டார். இதனால் மாவட்டத்தில் கடும் கட்டுப்பாடுகள் அமல் படுத்தப்பட்டு வருகிறது.
வேலூரில் இருந்து வரும் பஸ்கள் கண்ணமங்கலம் கூட்ரோடு வரை இயக்கப்படுகின்றன. திருவண்ணாமலை மாவட்டத்தில் இ-பாஸ் கட்டுப்பாட்டால் வேலூர் செல்லும் சாலையில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் வரை மட்டும் பஸ்கள் 17-ந்தேதியில் இருந்து இயக்கப்படுகின்றன. அதிகரித்து வரும் கொரோனா தொற்றால் அடிக்கடி பஸ் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது. இதனால் பயணிகள் கடும் அவதிப்படுகின்றனர். வேலூர் செல்லும் பயணிகள் தங்களின் மூட்டை முடிச்சுகளுடன் கூடுதலாக அரை கிலோ மீட்டர் நடந்து செல்கின்றனர். இதேபோல் வேலூரில் இருந்து வரும் பயணிகளும் மூட்டை முடிச்சுகளுடன் நடந்து வருகிறார்கள்.
கண்ணமங்கலம் கூட்ரோடு பகுதியில் தனித்தனியே செயல்படும் வேலூர், திருவண்ணாமலை வாகனச் சோதனைச் சாவடியில், சுகாதாரத் துறையினர் போலீசாருடன் இணைந்து கூடுதல் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா பரவலை தடுக்க பொதுமக்களை தீவிர பரிசோதனை செய்து வருகின்றனர். வெளியூர், வெளிமாநிலங்களில் இருந்து சொந்த ஊருக்கு வரும் மக்கள் கண்காணிப்பை மீறி, குறுக்குச் சாலைகள், கிராம சாலைகள் வழியாக தப்பிச்சென்று விடுகின்றனர்.
கிராமங்களில் ஊராட்சி தலைவர் தலைமையில், அனுமதியில்லாமல் வரும் நபர்களை கண்டறிந்து சுகாதாரத்துறை மூலம் கொரோனா பரிசோதனை செய்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். கொரோனா பரவலை தடுக்க அரசு அந்தந்த மாவட்டங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. அதற்கு பொதுமக்களும், வியாபாரிகளும், அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும். ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
Related Tags :
Next Story