திருக்கோவிலூர் அருகே, தூங்கிக்கொண்டிருந்த பெண் போலீசிடம் 7 பவுன் சங்கிலி பறிப்பு - மர்மநபர்கள் கைவரிசை


திருக்கோவிலூர் அருகே, தூங்கிக்கொண்டிருந்த பெண் போலீசிடம் 7 பவுன் சங்கிலி பறிப்பு - மர்மநபர்கள் கைவரிசை
x
தினத்தந்தி 19 Jun 2020 3:45 AM IST (Updated: 19 Jun 2020 8:56 AM IST)
t-max-icont-min-icon

திருக்கோவிலூர் அருகே தூங்கிக்கொண்டிருந்த பெண் போலீசிடம் மர்மநபர்கள் 2 பேர் 7 பவுன் சங்கிலியை பறித்து சென்றனர்.

திருக்கோவிலூர்,

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள செங்கனாங்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் சபரிராஜன். இவருடைய மனைவி யசோதா(வயது 34). இவர் திருக்கோவிலூர் போலீஸ் நிலையத்தில் முதல் நிலை காவலராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு சபரிராஜன், கரும்பு வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றுவிட்டார். வீட்டில் யசோதா தூங்கிக்கொண்டிருந்தார். அந்த சமயத்தில் வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள் 2 பேர், திடீரென யசோதாவின் கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்க சங்கலியை பறித்தனர். அப்போது திடுக்கிட்டு எழுந்த யசோதா, திருடன், திருடன் என கூச்சலிட்டார். இருப்பினும் மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர்.

இது குறித்து யசோதா போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் திருக்கோவிலூர் துணைபோலீஸ் சூப்பிரண்டு மகேஷ், இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பறிபோன நகையின் மதிப்பு ரூ.2½ லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி தங்க சங்கிலியை பறித்த சென்ற மர்மநபர்கள் 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பெண் போலீசிடம் தங்க சங்கிலி பறித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story