ஊரடங்கு உத்தரவு தளர்வு: கோவையில் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசல்


ஊரடங்கு உத்தரவு தளர்வு: கோவையில் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசல்
x
தினத்தந்தி 19 Jun 2020 9:22 AM IST (Updated: 19 Jun 2020 9:22 AM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டு உள்ள நிலையில் கோவையில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது.

கோவை,

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வருவது தடுக்கப்பட்டதுடன், சாலைகளும் வாகனபோக்குவரத்து இன்றி வெறிச்சோடியது.

இதனிடையே முழு ஊரடங்கில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டு கடைகள், வர்த்தக நிறுவனங்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. மேலும் ஆட்டோ, டாக்சி உள்ளிட்ட வாகனங்களும் இயக்க அனுமதிக்கப்பட்டன. கடந்த 1-ந் தேதி முதல் பஸ்களும் இயக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக வெறிச்சோடி கிடந்த சாலைகளில் வாகனங்கள் அதிகளவில் சென்று வருகின்றன.

எனவே கோவை மாநகரில் நாளுக்குநாள் வாகன போக்குவரத்து நெரிசல் அதிகரித்து உள்ளது. குறிப்பாக கோவை-திருச்சி சாலை, உக்கடம் சாலை, மேட்டுப்பாளையம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுகிறது. காலை மற்றும் மாலை நேரங்களில் சிக்னல்களில் வாகனங்கள் நீண்ட நேரம் காத்து நிற்கின்றன.

நாளுக்குள் நாள் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகன ஓட்டிகள் திணறி வருகின்றனர். சிக்னலில் காத்து நிற்கும்போது அருகில் நிற்கும் வாகன ஓட்டிகள் யாருக்காவது ஒருவருக்கு கொரோனா தொற்று இருந்தாலும் மற்றவர்களுக்கு பரவும் அபாயம் உள்ளது.

இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:-

கோவையில் கடந்த 2 வாரங்களாக போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. பிற மாவட்டங்களில் இருந்து கோவை வருபவர்கள் பெரும்பாலும் கோவை-திருச்சி சாலையைத்தான் பயன்படுத்துகின்றனர். இதன் காரணமாக இந்த சாலையில் எப்போதும் போக்குவரத்து நெருக்கடி காணப்படுகிறது.

மேலும் இந்த சாலையில் சுங்கம் முதல் ராமநாதபுரம் சிக்னல் அருகே உள்ள பள்ளி வரை மேம்பாலம் கட்டும் பணியும் நடைபெற்று வருகிறது. இதன்காரணமாக இந்த சாலையில் எப்போதும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. பெரும்பாலானோர் முகக்கவசம் அணிந்து வாகனங்களை இயக்குகின்றனர். இருப்பினும் கொரோனா தொற்று ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது. எனவே சிக்னலில் காத்து நிற்கும்போது சமூக இடைவெளியை கடைபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story