பள்ளிகள் திறக்காததால் நோட்டு புத்தகம், எழுது பொருட்களின் விற்பனை முற்றிலும் முடக்கம் - விளையாட்டு பொருட்களை வாங்குவதில் குழந்தைகள் ஆர்வம்


பள்ளிகள் திறக்காததால் நோட்டு புத்தகம், எழுது பொருட்களின் விற்பனை முற்றிலும் முடக்கம் - விளையாட்டு பொருட்களை வாங்குவதில் குழந்தைகள் ஆர்வம்
x
தினத்தந்தி 19 Jun 2020 12:33 PM IST (Updated: 19 Jun 2020 12:33 PM IST)
t-max-icont-min-icon

பள்ளிகள் திறக்காததால் நோட்டு புத்தகங்கள், எழுது பொருட்கள் விற்பனை முற்றிலும் முடங்கி விட்ட நிலையில் குழந்தைகள் விளையாட்டு பொருட்களை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

விருதுநகர், 

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பால் ஊரடங்கு தொடரும் நிலையில் பள்ளி, கல்லூரிகள் திறப்பது குறித்து எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை. அதிலும் குறிப்பாக பள்ளிகள் ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் ஜூன் மாதமே திறந்து விடும் நிலையில் தற்போது பள்ளிகள் திறப்பு எப்போது என்ற முடிவு எடுக்கப்படாத நிலை உள்ளது.

இந்தநிலையில் வழக்கமாக ஒவ்வொரு கல்வி ஆண்டு தொடக்கத்திலும் ஜூன் மாதம் பள்ளிகள் தொடங்கி விடுவதால் நோட்டு புத்தகம், எழுது பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படுவது உண்டு. ஆனால் தற்போது பள்ளிகள் திறக்கப்படாததால் நோட்டு புத்தகங்கள் மற்றும் எழுது பொருட்களின் விற்பனை முற்றிலுமாக முடங்கிவிட்டது. இதனால் தமிழகம் முழுவதும் நோட்டு புத்தக தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.

பள்ளிகளுக்கான துணைநூல் விற்பனையாளர்களும் இந்த கல்வி ஆண்டில் பள்ளிகள் திறப்பதில் தாமதம் ஆவதால் துணைநூல் விற்பனை பெரும் அளவில் பாதிக்கும் என எதிர்பார்த்து துணை நூல் தயாரிப்பையே நிறுத்திவிட்டதாக கூறப்படுகிறது.

தற்போது பள்ளி குழந்தைகள் விளையாட்டு உபகரணங்களையும், விளையாட்டு பொருட்களை வாங்குவதிலேயே அதிக ஆர்வம் காட்டிவரும் நிலை உள்ளது. பள்ளிகளுக்கு தேவையான நோட்டு புத்தகங்கள் மற்றும் எழுது பொருட்களை விற்பனை செய்தவர்களும் தற்போது பள்ளி குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்களையும், பொருட்களையும் விற்பனை செய்ய தொடங்கிவிட்டனர்.

மொத்தத்தில் கொரோனா வைரஸ் உடல்நிலை பாதிப்பை ஏற்படுத்தியதோடு, பள்ளி குழந்தைகளின் மனநிலையிலும் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த மாற்றத்தை பள்ளிகள் திறந்த பின்னர் மாற்றுவதற்கு பெற்றோர்களும், ஆசிரியர்களும் பெரும் முயற்சி மேற்கொள்ள வேண்டியது இருக்கும் என கல்வியாளர்கள் கருத்து தெரிவித்தனர்.

அதேபோல ஒரு சில தனியார் பள்ளிகள் ஆன்-லைன் வகுப்புகளை நடத்தி வருகின்றன. இங்கு முறையான கட்டணம் வசூலிக்கப்படுகிறதா? என அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Next Story