திருப்பூர் மாவட்டத்தில், ஒரே நாளில் 4 பேருக்கு கொரோனா - பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 120 ஆக உயர்வு
திருப்பூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 3 பெண்கள் உள்பட 4 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 120 ஆக உயர்ந்துள்ளது.
திருப்பூர்,
சீனாவில் இருந்து கொரோனா வைரஸ் பரவி உலக நாடுகளை அச்சுறுத்தி வந்து கொண்டிருக்கிறது. இந்த வைரசுக்கு வெளிநாடுகளில் ஏராளமானவர்கள் பலியாகி வருகிறார்கள். இந்தியாவிலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது.
இதன் காரணமாக தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வருகிற 30-ந் தேதி வரை ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களும் அரசு அறிவுறுத்தியுள்ள வழிகாட்டுதலின் படி இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தினமும் அதிகரித்து வருகிறது.
திருப்பூர் மாவட்டத்தில் வெளிநாடுகள், வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களில் இருந்து வந்தவர்கள் என தற்போது கடந்த ஒரு வாரமாக கொரோனா தொற்று பலருக்கு உறுதி செய்யப்பட்டது. இதனால் திருப்பூரில் தடுப்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த வாரம் முதல் மீண்டும் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் கொரோனா பாதிப்பிற்கு உள்ளாகி வந்து கொண்டிருப்பது பலரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
அதன்படி நேற்று முன்தினம் வரை சுகாதாரத்துறையின் திருத்தப்பட்ட பட்டியலின் படி திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 116 பேர் கொரோனா பாதிப்பிற்கு உள்ளானதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று ஒரே நாளில் 3 பெண்கள் உள்பட 4 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக திருப்பூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அரசு அறிக்கையின்படி 120 ஆக உயர்ந்துள்ளது. இந்த 4 பேருக்கும் தற்போது மேல்சிகிச்சை அளிக்கப்பட்டு கொண்டிருக்கிறது.
இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
நல்லூர் அருகே உள்ள புதுப்பாளையத்தை சேர்ந்த 28 வயது பெண், கொங்கு மெயின் ரோட்டை சேர்ந்த 29 வயது பெண் ஆகிய இருவரும் சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு வந்தனர். தொடர்ந்து அங்கு அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் பின்னர் அவர்கள் இருவரும் வீடுகளில் 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி அனுப்பிவைக்கப்பட்டனர். இந்நிலையில் இவர்களுக்கான பரிசோதனை முடிவுகள் வந்தது. இதில் இவர்கள் இருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து இவர்கள் 2 பேரும் கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டனர்.
இதுபோல் பல்லடம் கணபதிபாளையம் பகுதியை சேர்ந்த 27 வயது ஆண் ஒருவர் பல ஆண்டுகளாக திருப்பூர் மாவட்டத்தில் இருந்துள்ளார். கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பு இந்த 27 வயது ஆண் கோவையில் குடியேறியுள்ளார். இவரது உறவினர் கோவை அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவர் அந்த செவிலியரை அடிக்கடி ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று வந்துள்ளார். இதில் 27 வயது ஆண்ணுக்கு சளி, இருமல் ஏற்பட்டதை தொடர்ந்து பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அவர் கோவை மாவட்டத்தில் இருந்தாலும், அவரது ஆதார் முகவரி திருப்பூர் மாவட்டத்தில் உள்ளதால் இவர் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவராக கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.
மேலும், உடுமலையை சேர்ந்த 61 வயது மூதாட்டி ஒருவரின் சளி சந்தேகத்தின் பேரில் பரிசோதனை செய்யப்பட்டதில், அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக திருப்பூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 3 பெண்கள் உள்பட 4 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது சென்னை சுகாதாரத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் கணக்கின் படி திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் இதுவரை 120 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 115 பேர் குணமடைந்து விட்டனர். நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 4 பேர் உள்பட மொத்தம் 5 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களுக்கு கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story