கொரோனா தடுப்பு நடவடிக்கை: மத்திய அரசு ஆதரவு அளிக்கவில்லை - முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றச்சாட்டு
புதுவையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு மத்திய அரசு ஆதரவு அளிக்கவில்லை என முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றஞ்சாட்டினார்.
புதுச்சேரி,
புதுவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் நேற்று காலை முதல்-அமைச்சர் நாராயணசாமி, சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோர் அங்கு சென்று கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் பகுதிகளை ஆய்வு செய்தனர்.
அதன்பின் மருத்துவ அதிகாரிகள், மருத்துவர்களுடன் அங்கு ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-
நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. புதுவையில் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவை எதிர்த்து பெரிய அளவில் போராடி வருகிறோம். புதுச்சேரியில் கடந்த 17 தினங்களாக 67 சதவீதம் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் அரசு மருத்துவமனைகள் மற்றும் கல்லூரிகளில் பிற அறுவை சிகிச்சை உள்ளிட்ட சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொரோனா சிகிச்சைப்பணி கூடுதல் பணி. கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் ஆய்வை நிபுணர்கள்மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்தியாவிலேயே தமிழ்நாடு, மராட்டியம், குஜராத் ஆகிய மாநிலங்களில் தான் அதிக அளவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொற்று பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டுபிடிப்பது, தொற்றுக்கு ஆளானவர்களை தனிமைப்படுத்துவது போன்றவை தான் கொரோனா பரவலில் முக்கிய பணியாக உள்ளது.
புதுச்சேரியில் முதலில் டெல்லி மாநாட்டில் இருந்து வந்தவர்கள், அடுத்து கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து வந்தவர்கள், பின்னர் விழுப்புரம், கடலூர் மாவட்டங்களுக்கு சென்று திரும்பியவர்களால் தான் கொரோனா தொற்று அதிகரித்தது. ஒருவர் பாதிக்கப்பட்டால், அவரின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பாதிக்கப்படுகிறார்கள்.
மாநில முதல்-அமைச்சர்களுடன் காணொலி காட்சி மூலம் பேசிய பிரதமர் ஜூன் 30-க்கு பிறகு மேலும் தளர்வுகள் இருக்கும் என்று தெரிவித்துள்ளார். அப்போது கொரோனா நிவாரண பணிகளை மேற்கொள்வது குறித்து புதுச்சேரிக்கு தேவையான பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தோம். ஆனால் எதற்கும் மத்திய அரசு ஆதரவு அளிக்கவில்லை.
வெளிமாநில மக்களை அனுமதிக்க கூடாது என்ற கட்டுப்பாடு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இனிமேல் புதுச்சேரியில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை குறையும். இருக்கின்ற வசதிகளை கொண்டு புதுச்சேரி மக்களுக்கு சேவையாற்ற வேண்டும். கிராமப்புறத்திலும் தற்போது கொரோனா பரவி வருகின்றது. எனவே கொரோனா தொற்று குறித்து கிராம மக்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story