புதுவையில் இருந்து டெல்லி சென்ற கப்பல் என்ஜினீயருக்கு கொரோனா - தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை


புதுவையில் இருந்து டெல்லி சென்ற கப்பல் என்ஜினீயருக்கு கொரோனா - தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை
x
தினத்தந்தி 19 Jun 2020 1:52 PM IST (Updated: 19 Jun 2020 1:52 PM IST)
t-max-icont-min-icon

புதுவையில் இருந்து டெல்லி சென்ற கப்பல் என்ஜினீயருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவருடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கையில் சுகாதார துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

அரியாங்குப்பம், 

புதுச்சேரி வீராம்பட்டினம் அண்ணாநகர் தெற்கு தெருவை சேர்ந்த 27 வயது வாலிபர் கப்பல் என்ஜினீயர். வெளிநாட்டில் வேலைபார்த்து வந்தார். கொரோனா பரவலையொட்டி கடந்த சில மாதங்களுக்கு முன் சொந்த ஊருக்கு வந்தார். ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டதால் மீண்டும் வேலைக்கு செல்ல முடிவு செய்த அவர் இ-பாஸ் கேட்டு விண்ணப்பித்தார். அதற்காக கொரோனா பரிசோதனையும் செய்துகொண்டார். அவருக்கு இ-பாசும் கிடைத்தது. ஆனால் கொரோனா மருத்துவ பரிசோதனை அறிக்கை முடிவு வராமல் இருந்தது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் நண்பரின் கார் மூலம் பெங்களூரு சென்று அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி சென்றார். விமானத்தில் ஏறுவதற்கு முன் புதுவையில் கொரோனா பரிசோதனை செய்ததற்கான ஆவணத்தை காண்பித்துள்ளார். இந்தநிலையில் நேற்று காலை அவருக்கான மருத்துவ பரிசோதனை முடிவு வந்தது. அதில் அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து நேற்று காலை அரியாங்குப்பம் அரசு சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி தாரணி, வருவாய் ஆய்வாளர் கருணாநிதி, கிராம நிர்வாக அலுவலர்கள் மண்மாணிக்கம், கார்த்திகேயன் ஆகியோர் வீராம்பட்டினத்துக்கு ஆம்புலன்சுடன் சென்றனர். ஆனால் அங்கு கப்பல் என்ஜினீயர் இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து விசாரித்ததில் பணி நிமித்தமாக அவர் டெல்லி சென்றது தெரியவந்தது.

இதையடுத்து அவரிடம் செல்போனில் தொடர்பு கொண்டு டெல்லியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெறுமாறு மருத்துவக்குழுவினர் அறிவுறுத்தினர்.

கப்பல் என்ஜினீயரை புதுவையில் இருந்து பெங்களூருவுக்கு காரில் அழைத்துச்சென்ற, டிரைவர் தனிமைப்படுத்தப்பட்டார். கப்பல் என்ஜினீயருடன் தொடர்பில் இருந்தவர்கள் பற்றிய விவரங்களை சேகரித்து அவர்களையும் தனிமைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தொற்று பாதித்த கப்பல் என்ஜினீயர் வசித்த வீராம்பட்டினம் அண்ணாநகர் தெற்கு தெரு சீல் வைக்கப்பட்டது. நோய் பரவலை தடுக்க அங்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. அப்பகுதி மக்கள் வெளியே வராதபடி போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story