கவர்னகிரியில் வீரர் சுந்தரலிங்கம் மணிமண்டபத்தில் ரூ.72¾ லட்சத்தில் சீரமைப்பு பணிகள் - அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்
கவர்னகிரியில் வீரர் சுந்தரலிங்கம் மணிமண்டபத்தில் ரூ.72¾ லட்சம் மதிப்பில் சீரமைப்பதற்கான பணிகளை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று தொடங்கி வைத்தார்.
ஓட்டப்பிடாரம்,
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கவர்னகிரியில் சுதந்திர போராட்ட வீரர் சுந்தரலிங்கம் மணிமண்டபம் அமைந்துள்ளது. இந்த மணிமண்டபத்தில் ரூ.72 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பில் சீரமைப்பு பணிகள் மற்றும் கூடுதல் நூலக கட்டிடம் கட்டுவதற்கான பூமிபூஜை நேற்று நடந்தது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மணிமண்டபங்கள்
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மொழிப்போர் தியாகிகள், விடுதலைப் போராட்ட தியாகிகளுக்கு மணிமண்டபங்கள் கட்டி, அவர்களின் பிறந்த நாள் அன்று அரசு சார்பில் மாலையணிவித்து மரியாதை செலுத்திட அறிவுறுத்தி இருந்தார். அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசின் சார்பில், சுதந்திர போராட்ட வீரர்களின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாளில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி மாவட்டம் அதிகமாக விடுதலைப் போராட்ட தியாகிகள் கொண்ட மாவட்டமாகும். எட்டயபுரத்தில் மகாகவி பாரதியார் மணிமண்டபம், சீறாப்புராணம் இயற்றிய அமுதகவி உமறுப்புலவருக்கு மணிமண்டபம், ஓட்டப்பிடாரத்தில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் நினைவு மண்டபம், விளாத்திகுளத்தில் இசைமாமேதை நல்லப்ப சுவாமிகள் நினைவுத்தூண், திருச்செந்தூரில் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் கட்டப்பட்டு உள்ளன.
கவர்னகிரியில் வீரர் சுந்தரலிங்கம் மணிமண்டபத்தில் புனரமைப்பு பணிகள் மற்றும் நூலகம் கட்டிடம் கட்டும் பணிகளை விரைவில் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கலந்து கொண்டவர்கள்
நிகழ்ச்சியில் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், கோவில்பட்டி உதவி கலெக்டர் விஜயா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (கட்டிடம் மற்றும் கட்டுமானம்) ஜெயராமன், மாவட்ட கூட்டுறவு அச்சக தலைவர் அன்புராஜ், மாவட்ட கவுன்சிலர்கள் சந்திரசேகர், தேவராஜ், தங்கமாரியம்மாள் தமிழ்செல்வன், யூனியன் கவுன்சிலர்கள் வீரபாண்டி கோபி என்ற அழகிரி, சண்முககனி இந்திரன், அன்புக்கரசி ராஜீவ்காந்தி, பூங்கோதை, இசக்கிமுத்து என்ற கிரிதர்,
ஓட்டப்பிடாரம் தாசில்தார் ரகு, வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர்கள் பெரியமோகன், கருப்பசாமி, கண்ணன், ஆறுமுகசாமி, கவர்னகிரி பஞ்சாயத்து தலைவர் ஜேம்ஸ், பாண்டவர்மங்கலம் பஞ்சாயத்து தலைவர் கவிதா அன்புராஜ், முன்னாள் யூனியன் துணை தலைவர் சுப்புராஜ், யூனியன் ஆணையாளர்கள் ஹெலன் பெபன்மணி, வளர்மதி, அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் செங்கான், சண்முகவேல் மற்றும் முடுக்கலாங்குளம் சாமிராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story