நசரத்பேட்டை பகுதியில் முழு ஊரடங்கை மதிக்காமல் அணிவகுத்த வாகன ஓட்டிகள் - 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல்
திருவள்ளூர் மாவட்டம் நசரத்பேட்டை பகுதியில் முழு ஊரடங்கை மதிக்காமல் வழக்கம்போல் வாகன ஓட்டிகள் அணிவகுத்து வந்தனர். இதையொட்டி 100க்கும் மேற்பட்டோரின் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பூந்தமல்லி,
சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் கொரோனா வைரசின் தாக்கம் இதுவரை குறையாததால் நேற்று முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சென்னையின் நுழைவு வாயிலான பூந்தமல்லி-பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலை மற்றும் திருவள்ளூர் மாவட்டம் நசரத்பேட்டை-திருமழிசை கூட்டுச்சாலையில் நேற்று வாகன ஓட்டிகள், பொதுமக்கள் வழக்கம் போல் வாகனங்களில் அணிவகுத்து வந்தனர்.
இந்த பகுதியில் வாகன ஓட்டிகள் ஊரடங்கை மதிக்காமல் சாலைகளில் சுற்றித்திரிந்ததால் அங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதற்கான எந்தவித அறிகுறியும் தென்படவில்லை. இப்பகுதியில் உள்ள திருமழிசையில் தற்காலிக காய்கறிச்சந்தை அமைக்கப்பட்டுள்ளதால் காய்கறி வியாபாரிகள் வாகனங்களில் அணிவகுத்து வந்ததை காணமுடிந்தது. ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும்போது விதிமுறைகளை மீறி வாகனங்களில் பலர் அணிவகுத்து வந்ததால், போலீசார் செய்வதறியாது திகைத்து நின்றனர்.
வாகனங்கள் பறிமுதல்
இதையடுத்து 100-க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகளின் இருசக்கர வாகனங்கள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டு சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டன. விதிமுறைகளை மீறி வந்த வாகன ஓட்டிகளை கைது செய்து அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் பல மணி நேரம் தங்க வைத்து, போலீசார் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர். இவர்களில் பெரும்பாலானோர் திருமழிசை மார்க்கெட்டுக்கு வந்த வியாபாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
அங்கு கார் உள்ளிட்ட வாகனங்களில் வந்த ஏராளமானோர் காலாவதியான இ-பாஸ்கள் வைத்திருந்ததைக் கண்ட போலீசார், அவர்களை மடக்கி வாகனங்களை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்தனர். இதே போல் பூந்தமல்லி அடுத்த குமணன் சாவடியில் சாலையில் தடுப்புகள் அமைத்து தீவிரமாக கண்காணிக்கும் பணியில் போலீசாரும், நகராட்சி ஊழியர்களும் ஈடுபட்டனர்.
மாவட்ட கலெக்டர் ஆய்வு
செங்குன்றம் திருவள்ளூர் கூட்டு சாலை அருகே நடத்தப்பட்ட தீவிர வாகன சோதனையை மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார், பொன்னேரி தாசில்தார் மணிகண்டன் ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது மாவட்ட கலெக்டர், ஊரடங்கு உத்தரவை மீறி வெளியில் வருபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தினார்.
அதேபோல், திருவள்ளூர், மணவாளநகர், காக்களூர், திருப்பாச்சூர் பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அந்த வழியாக உள்ளே இ-பாஸ் இல்லாமல் வந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. திருவள்ளூர் காமராஜர் சிலை அருகே போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வடக்கு மண்டல ஐ.ஜி. நாகராஜன் திடீரென ஆய்வு மேற்கொண்டு, அந்த வழியாக உரிய இ-பாஸ் இல்லாமல் வந்த வாகன ஓட்டிகளை எச்சரித்து அனுப்பி வைத்தார்.
Related Tags :
Next Story