திருடன் என நினைத்து சரமாரி அடி-உதை: சினிமாவில் வாய்ப்பு தேடி வந்தவருக்கு நேர்ந்த சோக கதை
சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு வீட்டை வீட்டு ஓடி வந்த வாலிபரை திருடன் என நினைத்து பொதுமக்கள் சரமாரியாக அடித்து உதைத்தனர். போலீசார் அவரை மீட்டு அவரது தந்தையிடம் ஒப்படைத்தனர்.
வசாய்,
உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் பங்கஜ் சிங் (வயது32). மெக்கானிக்கல் என்ஜினீயரான இவர் இந்தி சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு கடந்த மார்ச் மாதம் மும்பை வந்தார். நாலாச்சோப்ராவில் ஆன்லைன் மூலம் அறிமுகமான சச்சின்குமார் என்பவரது வீட்டில் தங்கி இருந்தார். அப்போது கொரோனா வைரஸ் காரணமாக ஊடரங்கு அமல் படுத்தப்பட்டது.
இதனால் பங்கஜ் சிங் செலவுக்கு வைத்திருந்த பணம் காலியானது. இதனால் சச்சின் குமார் அவரை வீட்டை வீட்டு துரத்தி விட்டார். இதனால் நடைபாதையில் தங்கி இருந்து வந்தார்.
திருடன் என நினைத்து...
அப்போது அவருக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டதால் வசாய்-விரார் மாநகராட்சி அதிகாரிகள் அவரை மீட்டு விராரில் உள்ள சிகிச்சை மையத்தில் அனுமதித்தனர். அங்கு நடத்திய பரிசோதனையில் கொரோனா இல்லை என தெரியவந்தது. இதையடுத்து அவரை சிகிச்சை மையத்தில் இருந்து டிஸ்சார்ஜ் செய்தனர். இதனால் வசிக்க வீடு இல்லாமல் நடைபாதையில் நின்ற பாழடைந்த கார் ஒன்றில் தஞ்சம் புகுந்தார்.
இதனை கண்ட அப்பகுதி மக்கள் பங்கஜ் சிங்கை திருடன் என நினைத்து அவரை பிடித்து சரமாரியாக தாக்கினர். இதில் அவரது இடது கை முறிந்தது. தகவல் அறிந்த மாணிக்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவரை மீட்டு விசாரித்தனர்.
போலீஸ்காரரின் மகன்
இதில் பங்கஜ் சிங்கின் தந்தை உத்தரகாண்ட் மாநிலம் உதாம்சிங் நகர் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருவது தெரியவந்தது. இதையடுத்து அவரை தொடர்பு கொண்டு வசாய் போலீஸ் நிலையத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தனர்.
பாதிக்கப்பட்ட பங்கஜ் சிங்கிற்கு உணவு மற்றும் உடைகள், தேவையான மருத்துவ சிகிச்சைகள் தனியார் தொண்டு நிறுவனம் மூலம் வழங்கினர். கடந்த சில தினங்களுக்கு முன்பு வசாய் போலீஸ் நிலையம் வந்த பங்கஜ் சிங்கின் தந்தை அங்கிருந்த மகனை மீட்டு பத்திரமாக அழைத்து சென்றார்.
Related Tags :
Next Story