சமூக இடைவெளியை பின்பற்றாததால் கோவை பூ மார்க்கெட் கடைகள் திடீர் மூடல்


சமூக இடைவெளியை பின்பற்றாததால் கோவை பூ மார்க்கெட் கடைகள் திடீர் மூடல்
x
தினத்தந்தி 20 Jun 2020 3:30 AM IST (Updated: 20 Jun 2020 4:20 AM IST)
t-max-icont-min-icon

சமூக இடைவெளியை பின்பற்றாததால் கோவை பூ மார்க்கெட் கடைகள் நேற்று திடீரென்று மூடப்பட்டன.

கோவை,

கோவை மேட்டுப்பாளையம் சாலையில் பூ மார்க்கெட் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இங்கு 200-க்கும் மேற்பட்ட கடைகள் செயல்படுகின்றன. சில்லரை மற்றும் மொத்த பூ வியாபாரமும் இங்கு நடக்கிறது. கோவை மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்தும் பூக்கள் கொண்டு வரப்பட்டு விற்கப்படுகின்றன.

கொரோனா பரவலை தொடர்ந்து பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் பூ மார்க்கெட்டை ஆர்.எஸ்.புரம் ஆக்கி மைதானத்துக்கு கொண்டு செல்ல கோவை மாநகராட்சி முடிவு செய்தது. ஆனால் அங்கு செல்ல பூ மார்க்கெட் வியாபாரிகள் முன்வரவில்லை. இருந்தபோதிலும் பூ மார்க்கெட் தொடர்ந்து இயங்கி வந்தது.

கோவையில் கொரோனா வேகமாக பரவி வருவதால் வியாபாரிகள் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். முகக்கவசம் அணிய வேண்டும் என்று கோவை மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தினார்கள். ஆனால் பூ மார்க்கெட்டுக்கு வருபவர்கள் அதை கடைப்பிடிப்ப தில்லை என்று கோவை மாநகராட்சி தனி அதிகாரிக்கு புகார்கள் சென்றன. இதைத்தொடர்ந்து தனி அதிகாரி ஷ்ரவன் குமார் ஜடாவத் அங்கு சென்று ஆய்வு செய்தார். அப்போது பூ மார்க்கெட்டில் சமூக இடைவெளி கடைபிடிக்காதது உறுதியானது. இதைத்தொடர்ந்து பூ மார்க்கெட்டை உடனடியாக மூட தனி அதிகாரி உத்தரவிட்டார்.

அதன்பேரில் நேற்று காலை மாநகராட்சி ஊழியர்கள் திடீரென்று பெரிய இரும்பு தகடுகளை கொண்டு வந்து கடைகள் முன்பு வைத்து அடைத்தனர். பூ மார்க்கெட்டில் உள்ள கடைகளுக்கு கதவுகள் இல்லாததால் சாலையில் இருந்து யாரும் கடைக்கு செல்ல முடியாதவாறு தகடுகள் பொருத்தப்பட்டன. இதனால் பூ மார்க்கெட் கடைகளில் நேற்று வியாபாரம் நடக்கவில்லை. இதில் பூக்கடைகள் மட்டுமல்லாமல் மண்பாண்டம் விற்கும் கடைகள், மளிகை கடைகள், பூஜை சாமான்கள் முன்பும் இரும்பு தகடுகள் வைத்து அடைக்கப்பட்டன. இதனால் அந்த கடைகளிலும் நேற்று வியாபாரம் நடக்கவில்லை.

இதுகுறித்து கோவை மாவட்ட மலர் வியாபாரிகள் சங்கத்தலைவர் ஆர்.ரவிச்சந்திரன், செயலாளர் அன்சர், பொருளாளர் அய்யப்பன் ஆகியோர் கூறியதாவது:-

கொரோனா பரவல் காரணமாக கடந்த 4 மாதங்களாக பூ வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். சுமார் 10 ஆயிரம் குடும்பத்தினர் நேரடியாக வாழ்வாதாரத்தை இழந்து உள்ளனர். தற்போது கடைகள் அடைக்கப்பட்டதால் வியாபாரம் இல்லை. ஏற்கனவே உள்ள மலர் அங்காடி முன்பு 100 கடைகள் புதிதாக கட்டப்பட்டு உள்ளன. அவை தயார் ஆவதற்கு இன்னும் 20 நாட்கள் ஆகும் என்று தெரிகிறது.

அதுவரை பூமார்க்கெட்டில் சமூக இடைவெளி விட்டு கடைகள் அமைத்து வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும். கொரோனாவால் ஒவ்வொரு வியாபாரியும் லட்சக்கணக்கில் நஷ்டம் அடைந்து வருகின்றனர். எனவே கொரோனா பரவல் கட்டுப்பாட்டுக்குள் வரும் வரை பூக்கடைகளுக்கு வசூலிக்கப்படும் மாத வாடகையை மாநகராட்சி தள்ளுபடி செய்ய வேண்டும்.

மேலும் கடந்த 4 மாதங்களாக போதிய வருமானம் இன்றி தவிக்கும் பூ வியாபாரிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் நிவாரண உதவி வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாநகராட்சி தனி அதிகாரியை சந்தித்து முறையிட உள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story