திருப்பத்தூர் தாலுகா மருத்துவமனையில் ரூ.2 கோடியில் கொரோனா தொற்று பரிசோதனை மையம் - 2 அமைச்சர்கள் திறந்து வைத்தனர்


திருப்பத்தூர் தாலுகா மருத்துவமனையில் ரூ.2 கோடியில் கொரோனா தொற்று பரிசோதனை மையம் - 2 அமைச்சர்கள் திறந்து வைத்தனர்
x
தினத்தந்தி 20 Jun 2020 10:35 AM IST (Updated: 20 Jun 2020 10:35 AM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூர் தாலுகா மருத்துவமனையில் ரூ.2 கோடியில் கொரோனா தொற்று பரிசோதனை மையம் அமைக்கப்பட்டுள்ளது. அதை, 2 அமைச்சர்கள் பங்கேற்று திறந்து வைத்தனர்.

திருப்பத்தூர், 

திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனை செய்பவர்கள் சளி, ரத்த மாதிரியை சென்னை கிண்டியில் உள்ள கிங் பரிசோதனை மையத்துக்கு தினமும் எடுத்துச் சென்று மீண்டும் அங்கிருந்து முடிவுகளை எடுத்து வருகிறார்கள். இதனால் கால விரயம், முடிவுகள் தெரிய தாமதம் ஆகிறது. இதனால் திருப்பத்தூர் தாலுகா அரசு மருத்துவமனையில் ரூ.2 கோடியில் கொரோனா தொற்று பரிசோதனை மையம் (ஆர்.டி.பி.சி.ஆர். டெஸ்ட்) அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கொரோனா பரிசோதனை மையம் திறப்பு விழா நடந்தது. அரசு மருத்துவ அலுவலர் திலீபன் தலைமை தாங்கினார். மாவட்ட கூட்டுறவு அச்சகம் தலைவர் டி.டி.குமார் முன்னிலை வகித்தார். அமைச்சர்கள் கே.சி.வீரமணி, நிலோபர்கபில், கலெக்டர் சிவன்அருள், போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, பரிசோதனை மையத்தைத் தொடங்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் மருத்துவமனை இணை இயக்குனர் டாக்டர் யாஸ்மின், சுகாதாரத்துறை துணை இயக்குனர்கள் கே.எஸ்.டி.சுரேஷ், நெடுமாறன், எம்.எல்.ஏ.க்கள் நல்லதம்பி, வில்வநாதன், முன்னாள் எம்.எல்.ஏ., கே.ஜி.ரமேஷ், மருத்துவமனை இளநிலை நிர்வாக அலுவலர் சரவணன், அலுவலக கண்காணிப்பாளர் அருள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் டாக்டர் பி. பிரபாகரன் நன்றி கூறினார்.

அப்போது அமைச்சர் கே.சி.வீரமணி நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் இதுவரை 20 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை பகுதியைச் சேர்ந்த பொதுமக்களுக்கும், திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்படும்.

24 மணி நேரமும் செயல்படும் இந்தப் பரிசோதனை மையத்தில் தினமும் 400 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்படும். வெளியூரில் இருந்து வரும் அனைவரும் தாமாகவே முன்வந்து கொரோனா தொற்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இரவு 8 மணிக்கு மேல் வரும் மோட்டார்சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்படும், என அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் கொரோனா தொற்று பரவாமல் தடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story