சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு பயணம்: சேலத்துக்கு ஒரே நாளில் 2 ஆயிரம் பேர் வந்ததால் போலீசார் திணறல்
சென்னையில் இருந்து வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டனர். இதனால் சேலத்துக்கு ஒரேநாளில் 2 ஆயிரம் பேர் வந்ததால் போலீசார் திணறினர்.
சேலம்,
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருவதால் அதனை கட்டுப்படுத்தும் வகையில் வருகிற 30-ந்தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அங்கு வசித்து வந்த வெளியூரை சேர்ந்த ஏராளமானோர் தங்களது சொந்த ஊர்களுக்கு குடும்பத்துடன் பயணிக்க ஆரம்பித்தனர்.
சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து சேலத்துக்கு வரும் நபர்கள் முறையாக இ-பாஸ் பெற்றுள்ளனரா? எதற்காக வருகிறார்கள்? என்ற விவரத்தை கேட்டு அவர்களை பரிசோதனை செய்வதற்காக சேலம் அருகே அயோத்தியாப்பட்டணம் பகுதியில் மாசிநாயக்கன்பட்டியில் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு கடந்த சில நாட்களாக கூடுதல் போலீசார் பணி அமர்த்தப்பட்டு சென்னையில் இருந்து மோட்டார் சைக்கிள் மற்றும் கார் உள்ளிட்ட வாகனங்களில் வரும் நபர்களை விசாரணை மேற்கொண்டு அதன்பிறகு அவர்கள் நகருக்குள் செல்ல அனுமதிக்கின்றனர்.
அந்த வகையில் நேற்று முன்தினம் இரவு ஒரேநாளில் சென்னையில் இருந்து கள்ளக்குறிச்சி, ஆத்தூர் வழியாக சேலத்தை நோக்கி அடுத்தடுத்து பல்வேறு வாகனங்கள் வந்தன. அதாவது மொபட், மோட்டார் சைக்கிள், கார், லாரி உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்தனர்.
இதனால் சோதனைச்சாவடியில் இருந்த போலீசார் என்ன செய்வதென்று தெரியாமல் திணறினர். இருப்பினும் கார் உள்ளிட்ட வாகனங்களை வரிசையாக நிறுத்தி, அவர்கள் முறையாக இ-பாஸ் வைத்துள்ளனரா? என்பது குறித்து விசாரித்து அதன் பிறகே சேலத்துக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
மேலும் மொபட் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்தவர்களில் பெரும்பாலானோர் சோதனைச்சாவடியில் நின்றிருந்த போலீசாருக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு அங்கிருந்து வேகமாக சென்றுவிட்டனர். எனினும் முறையாக அனுமதி பெறாமல் வந்ததாக 200-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அடுத்தடுத்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சோதனைச்சாவடியில் திரண்டதால் போலீசாரால் கட்டுப்படுத்த முடியவில்லை.
இதை பயன்படுத்தி கொண்டு ஏராளமானவர்கள் வெளி மாவட்டங்களில் இருந்து சேலத்துக்குள் நுழைந்துவிட்டனர். அவர்கள் அனைவரும் சேலம் மாநகரில் அவர்களது வீடுகளிலோ அல்லது உறவினர்களின் வீடுகளிலும் தஞ்சம் அடைந்துள்ளனர். இதன் காரணமாக சேலம் மாவட்டத்தில் இனிமேல் தான் கொரோனா வைரசின் தாக்கம் வேகமாக பரவும் என்ற அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து சேலம் மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, சென்னையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் அங்கிருந்து சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஒரேநாளில் சேலத்துக்குள் வந்துள்ளனர். ஆனால் அவர்களில் பெரும்பாலான நபர்களை கண்டறிந்து கொரோனா பரிசோதனைக்காக தனிமைப்படுத்தும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கொரோனா தொற்று இருந்தால் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். அதேசமயம் நோய் தொற்று இல்லாத நபர்கள் அவர்களது வீடுகளுக்கு செல்ல அனுப்பி வைக்கப்படுவார்கள். இதே போல் காட்பாடியில் இருந்து ரெயில் மூலம் சேலம் வரும் பயணிகளுக்கும் பரிசோதனை செய்யப்படுகிறது என்றனர்.
Related Tags :
Next Story