‘தி.மு.க. இனி ஆட்சிக்கு வர முடியாது’ - அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி பேட்டி


‘தி.மு.க. இனி ஆட்சிக்கு வர முடியாது’ - அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி பேட்டி
x
தினத்தந்தி 20 Jun 2020 11:31 AM IST (Updated: 20 Jun 2020 11:31 AM IST)
t-max-icont-min-icon

தி.மு.க. இனி ஆட்சிக்கு வர முடியாது என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறினார்.

சிவகாசி, 

விருதுநகர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் மகளிர் சுயஉதவிக்குழுக்கான கோவிட்-19 சிறப்பு கடனுதவி திட்ட தொடக்க விழா திருத்தங்கலில் நடைபெற்றது. கலெக்டர் கண்ணன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி 255 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.1 கோடியே 71 லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள கடனுதவியை வழங்கினார்.

இதன் மூலம் 3,419 பேர் பயன் பெறுவார்கள். இதேபோல் பொதுத்தேர்வில் அதிக தேர்ச்சி விழுக்காடு பெற்ற ஆசிரியர்கள் 14 பேருக்கு ஊக்கப்பரிசு தொகை வழங்கினார். 432 கட்டுமான தொழிலாளர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மங்கள ராமசுப்பிரமணியன், சிவகாசி சப்-கலெக்டர் தினேஷ்குமார், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிதலைவர் மயில்சாமி, மத்திய கூட்டுறவு வங்கியின் இணைபதிவாளர், மேலாண்மை இயக்குனர் செந்தில்குமார், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பலராமன், திருவள்ளுவன், பானுகோபால், கூட்டுறவு ஒன்றியதலைவர் ஆரோக்கியராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் பேசி வருகிறார். உலகில் உள்ள அனைத்து தலைவர்களும் தனித்திரு, விலகி இரு, வீட்டில் இரு என்று கூறிக்கொண்டு இருக்கையில் ஸ்டாலின் மட்டும் ஒன்றிணைவோம் வா என்று கூறி குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார். மு.க.ஸ்டாலின் இந்த அரசை குறை சொல்வதே முக்கிய வேலையாக செய்து வருகிறார்.

கடந்த 3 மாதங்களாக விருதுநகர் மாவட்டத்தில் அனைத்து பகுதி மக்களுக்கும் அ.தி.மு.க. சார்பில் நிவாரண பொருட்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் தி.மு.க. என்ன செய்தது. ஸ்டாலினிடம் இருக்கும் பணத்தை வைத்து அவர் மக்களுக்கு ஏதாவது செய்து இருக்கலாம். ஆனால் அவர் எதுவும் செய்யவில்லை. இதை எல்லாம் மக்கள் மறந்து விட்டார்கள் என்று ஸ்டாலின் நினைக்கிறார். ஆனால் மக்கள் எதையும் மறக்கவில்லை. எப்போது தேர்தல் வந்தாலும் தி.மு.க. ஆட்சிக்கு வர முடியாது. அடுத்த தேர்தலோடு தி.மு.க. காணாமல் போய்விடும். மீண்டும் எடப்பாடி பழனிசாமி தான் தமிழகத்தின் முதல்-அமைச்சராக வருவார்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது திருத்தங்கல் அ.தி.மு.க. நகர செயலாளர் பொன்சக்திவேல், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் சீனிவாசன், வக்கீல் முத்துப்பாண்டி உள்பட பலர் உடனிருந்தனர்.

Next Story