கொரோனா பாதிப்பை தடுக்க கட்டுமான தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு பெட்டகம் - அமைச்சர் பாஸ்கரன் வழங்கினார்


கொரோனா பாதிப்பை தடுக்க கட்டுமான தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு பெட்டகம் - அமைச்சர் பாஸ்கரன் வழங்கினார்
x
தினத்தந்தி 20 Jun 2020 11:31 AM IST (Updated: 20 Jun 2020 11:31 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா வைரசால் பாதிப்பை தடுக்க கட்டுமான தொழிலாளர்களுக்கு அரசின் சார்பில் வழங்கப்பட்ட பாதுகாப்பு பெட்டகத்தை அமைச்சர் பாஸ்கரன் வழங்கினார்.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்ட தொழிலாளர் நலத்துறையின் சார்பில் கட்டுமான தொழிலாளர்களுக்கு பணியின்போது கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்கும் வகையில் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது. மானாமதுரை தொகுதி எம்.எல்.ஏ. நாகராஜன் முன்னிலை வகித்தார். அமைச்சர் பாஸ்கரன் கட்டுமான தொழிலாளர்களுக்கு உபகரணங்கள் வழங்கி பேசியதாவது:- தமிழகத்தில் கொரோனா பாதிப்பை தவிர்க்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது கட்டுமான தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க நல வாரியத்தில் பதிவு செய்த தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் அடங்கிய பெட்டகம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த பெட்டகத்தில் கவச உடை, கால்களுக்கு அணியும் பூட்ஸ் மற்றும் சாக்ஸ், கையுறை மற்றும் கண்ணாடி, தொப்பி ஆகியவை அடங்கி இருக்கும். சிவகங்கை மாவட்டத்தில் 491 பேருக்கு இந்த பாதுகாப்பு பெட்டகம் வழங்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் 4 பயனாளிகளுக்கு விலையில்லா இஸ்திரி பெட்டிகளை அமைச்சர் பாஸ்கரன் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட தொழிலாளர் நலத்துறை அலுவலர் உஷா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் தனலெட்சுமி, சிவகங்கை ஊராட்சி ஒன்றிய தலைவர் மஞ்சுளா பாலசந்தர், இந்து சமய அறநிலைத்துறை மாவட்டக்குழு தலைவர் சந்திரன், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட கூட்டுறவு அச்சக தலைவர் சசிக்குமார் உள்பட அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Next Story