நாளை மறுநாள் முதல் பெரியமார்க்கெட் காய்கறி கடைகள் மீண்டும் புதிய பஸ் நிலையத்துக்கு மாற்றம்
பெரிய மார்க்கெட் காய்கறி கடைகள் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) முதல் புதுச்சேரி புதிய பஸ் நிலையத்துக்கு மீண்டும் இடமாற்றம் செய்யப்படுகிறது.
புதுச்சேரி,
புதுவையில் கொரோனா வால் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசும், மாவட்ட நிர்வாகமும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 5-ம் கட்டமாக பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டபோது தற்காலிகமாக புதிய பஸ் நிலையத்தில் இயங்கி வந்த பெரிய மார்க்கெட்டிற்கு இடமாற்றம் செய்யப்பட்டது.
அங்கு வரும் பொதுமக்களும், வியாபாரிகளும் சமூக இடைவெளியை கடைபிடிக்காதது, முகக்கவசம் அணியாதது உள்பட ஊரடங்கு விதிமுறைகளை கடைபிடிக்கவில்லை என புகார் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து பெரிய மார்க்கெட்டில் இடநெருக்கடியை குறைப்பதற்காக அங்கிருந்து காய்கறி கடைகளை ஏ.எப்.டி. மைதானத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் நேரு வீதி பழைய சிறைச்சாலை வளாகத்தில் நடைபாதை கடைகளை மாற்ற ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்கு அந்த வியாபாரிகள் ஒப்புக் கொள்ளவில்லை.
இந்தநிலையில் புதுவை சாரம் பழைய கலெக்டர் அலுவலகத்தில் பெரிய மார்க்கெட் வியாபாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு சப்- கலெக்டர் சுகாதர் தலைமை தாங்கினார். இதில் நகராட்சி அதிகாரிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் நாளை மறுநாள் முதல் (திங்கட்கிழமை) பெரிய மார்க்கெட்டில் இயங்கி வரும் மொத்தம், சில்லரை மற்றும் அடிக்காசு காய்கறி கடைகள் மீண்டும் புதிய பஸ் நிலையத்தில் இயங்க முடிவு எடுக்கப்பட்டது.
பெரிய மார்க்கெட்டில் வழக்கம்போல் மளிகைக் கடைகள், பழக்கடைகள், பூக்கடைகள் செயல்படலாம். புதிய பஸ்நிலையத்தில் வியாபாரிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் பொதுப்பணித்துறை, நகராட்சி அதிகாரிகள் செய்து கொடுக்க வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டது.
Related Tags :
Next Story