பூந்தமல்லியில் தனியார் நிறுவனத்தில் 8 வாகனங்கள் தீயில் எரிந்து நாசம்
பூந்தமல்லியில் தனியார் நிறுவனத்தில் நிறுத்தி இருந்த 8 வாகனங்கள் தீயில் எரிந்து நாசமாயின.
பூந்தமல்லி,
பூந்தமல்லியில் தனியார் நிதி நிறுவனத்துக்கு சொந்தமான இடம் உள்ளது. இந்த நிறுவனத்தின் சார்பில் வாகன கடன் பெற்று, மாத தவணையை சரிவர கட்டாதவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்து இங்கு நிறுத்தி வைத்து இருந்தனர்.
நேற்று மாலை திடீரென அங்கு நிறுத்தி இருந்த லாரி உள்ளிட்ட வாகனங்களில் தீப்பிடித்து எரிந்தது. இதுபற்றி தகவல் அறிந்து வந்த பூந்தமல்லி மற்றும் மதுரவாயல் தீயணைப்பு நிலைய வீரர்கள் வாகனங்களில் கொழுந்து விட்டு எரிந்த தீயை 1 மணிநேரம் போராடி அணைத்தனர்.
எனினும் தீ விபத்தில் அங்கு நிறுத்தி இருந்த வேன், லாரி உள்பட 8 வாகனங்கள் முற்றிலும் எரிந்து நாசமாயின. மேலும் சில வாகனங்கள் தீயில் சேதமடைந்தது. இதுகுறித்து பூந்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்
மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கம், கிருஷ்ணமாச்சாரி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த்(54). இவரது வீட்டில் சுரேஷ் என்பவர் வாடகைக்கு தங்கி இருந்தார். சொந்தமாக கார் வைத்து ஓட்டிவந்த இவர், வாடகை தர முடியாததால் சில மாதங்களுக்கு முன்பு வீட்டை காலி செய்து விட்டு சென்றார்.
அப்போது வாடகை பணத்தை கொடுத்து விட்டு தனக்கு சொந்தமான காரை எடுத்துச் செல்வதாக கூறி அவரது காரை அங்கேயே நிறுத்திவிட்டு சென்றார். திடீரென அந்த கார் நேற்று தீப்பிடித்து எரிந்தது. மதுரவாயல் தீயணைப்பு நிலைய வீரர்கள் காரில் எரிந்த தீயை அணைத்தனர். எனினும் கார் முற்றிலும் எரிந்து நாசமானது.
தற்போது சுரேஷ் காட்பாடியில் வசித்து வருகிறார். அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு உள்ளது. காரில் உள்ள பேட்டரியில் மின் கசிவு காரணமாக தீப்பிடித்து எரிந்ததா? அல்லது நாச வேலை காரணமா? என்பது குறித்து மதுரவாயல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story