கோவையில் சினிமா பாணியில் சம்பவம்: காதல் திருமணம் செய்த இளம்பெண் காரில் கடத்தல் - கணவர், மாமியாரை தாக்கி விட்டு தப்பிச் சென்ற கும்பலுக்கு வலைவீச்சு
கோவையில் காதல் திருமணம் செய்த இளம்பெண் காரில் கடத்தி செல்லப்பட்டார். இதை தடுக்க வந்த கணவரையும், மாமியாரையும் தாக்கி விட்டு தப்பிச் சென்ற கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். சினிமா பாணியில் நடந்த இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
துடியலூர்,
கோவை கவுண்டம்பாளையம் அருகே உள்ள இடையர்பாளையம் லூனா நகரை அடுத்த வித்யா காலனியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மனைவி வசந்தகுமாரி. இவர்களது மகன் கார்த்திகேயன் (வயது 35). இவர் காந்திபுரத்தில் உள்ள ஒரு தனியார் பயிற்சி மையத்தில் பயிற்சியாளராக பணியாற்றி வந்தார். இங்கு திருச்சி சஞ்சீவிநகரை சேர்ந்த சுந்தர்ராஜன் என்பவரது மகள் தமிழினி பிரபா (25) என்பவர் படித்து வந்தார்.
இதனால் அவர்கள் ஒருவருக்கு ஒருவர் அறிமுகம் ஆகி சாதாரணமாக பழகினர். நாளடைவில் அந்த பழக்கம் காதலாக மாறியது. இதையடுத்து அவர்கள் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். அவர்களின் காதல் விவகாரம் இருவீட்டு பெற்றோருக்கும் தெரிய வந்தது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெண்ணின் வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். எங்கே நம்மை பிரித்து விடுவார்களோ என்று அஞ்சிய காதல் ஜோடி, கடந்த 5-ந் தேதி கோவையில் திருமணம் செய்து கொண்டனர். மேலும் அவர்கள், கோவை மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் தங்களது திருமணத்தை முறைப்படி பதிவு செய்து கொண்டனர்.
இதை அறிந்த தமிழினி பிரபாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், அவர்களின் திருமணத்தை ஏற்க மறுத்து கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். ஆனால் கார்த்திகேயன் குடும்பத்தினர், காதல்ஜோடியை ஏற்றுக் கொண்டனர். இதையடுத்து கார்த்திகேயன் தனது மனைவி தமிழினி பிரபாவுடன் தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு கார்த்திகேயனின் வீட்டுக்குள் தமிழினி பிரபாவின் பெற்றோர் மற்றும் சிலர் திடீரென்று வந்தனர். அவர்களுடன் கார்த்திகேயன் பேசி கொண்டிருந்தார். அப்போது அவர்கள் திடீரென்று தமிழினிபிரபாவை வலுக்கட்டாயமாக இழுத்து காரில் கடத்தி செல்ல முயன்றனர். இதனால் அவர் அலறினார். உடனே அவர்களை, கார்த்திகேயனும், அவருடைய தாய் வசந்தகுமாரியும் தடுக்க முயன்றனர். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த கும்பல், வசந்தகுமாரியை தாக்கி கீழே தள்ளினர். இதில் அவர் மயங்கி கீழே விழுந்தார். மேலும் கார்த்திகேயனையும் தாக்கி ஒரு அறையில் போட்டு பூட்டினர். இதையடுத்து அவர்கள், தமிழினி பிரபாவை காரில் கடத்திச் சென்றனர்.
இதையடுத்து அக்கம்பக்கத்தினர் வந்து வசந்தகுமாரியின் முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பினர். வீட்டின் ஒரு அறையில் அடைக்கப் பட்டு இருந்த கார்த்திகேயனையும் மீட்டனர். பின்னர் அவர்கள் 2 பேரும் அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து துடியலூர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரில், எனது காதல் மனைவியை அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் காரில் கடத்திச் சென்று விட்டனர். என்னையும், எனது தாயையும் தாக்கி விட்டு சென்று விட்டனர். அவர்கள் எனது மனைவியை கவுரவ கொலை செய்து விடுவார்களோ என அச்சமாக உள்ளது. எனவே எனது மனைவியை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி தப்பி சென்ற கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர். சினிமா பாணியில் நடந்த இந்த சம்பவம் கோவையில பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story