3 நாட்கள் மட்டுமே திறக்க அனுமதி: வேலூர் நகரில் பெரும்பாலான கடைகள் அடைப்பு - தடையை மீறி விற்பனை செய்தவர்கள் விரட்டியடிப்பு
வேலூர் நகரில் காய்கறி, மளிகைக்கடைகள் உள்ளிட்ட பெரும்பாலான கடைகள் நேற்று அடைக்கப்பட்டிருந்தன. தடையைமீறி கடையை திறந்து விற்பனை செய்த வியாபாரிகளை போலீசார் விரட்டியடித்தனர்.
வேலூர்,
வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு தினமும் அதிகரித்து வருகிறது. அதனை தடுக்கும் நடவடிக்கையாக மாவட்டம் முழுவதும் நேற்று முதல் காய்கறி, மளிகை கடைகள் (சில்லரை விற்பனை), நகை, துணிக்கடைகள் திங்கள், புதன், வெள்ளி ஆகிய 3 நாட்கள் மட்டும் திறக்க வேண்டும், இறைச்சி கடைகள் ஞாயிறு, புதன்கிழமைகளும், மளிகை, பருப்பு, அரிசி, நவதானியம், காய்கறி மொத்த விற்பனை கடைகள் திங்கள், புதன், வெள்ளி ஆகிய 3 நாட்களும் இயங்கும் என்று கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்தார். மேலும் அவர், அரசின் விதிமுறை பின்பற்றாத மற்றும் தடையை மீறி விற்பனை செய்யும் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.
அதன்படி சாரதிமாளிகை, காட்பாடிசாலை, அண்ணாசாலை, ஆரணிசாலை, ஆற்காடு சாலை, சத்துவாச்சாரி பகுதிகளில் மளிகை, காய்கறி உள்ளிட்ட பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தன. தடையை மீறி கடைகள் திறந்தவர்களை அந்தந்த பகுதி போலீசார் உடனடியாக அடைக்கும்படி எச்சரித்தனர். நேதாஜி மார்க்கெட், மண்டித்தெருவில் செயல்படும் மொத்த காய்கறி கடைகள் அனைத்தும் மாங்காய் மண்டி அருகே இயங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் நேதாஜி காய்கறி மார்க்கெட் நேற்று காலை வழக்கம்போல் இயங்கியது. கடைகள் நாளை தான் திறக்கும் என்பதால் ஏராளமாள பொதுமக்கள் அங்கு குவிந்தனர். தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்காமல் அவர்கள் அருகருகே நின்று கொண்டிருந்தனர். இதுகுறித்து தகவலறிந்த வேலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் அங்கு சென்று வியாபாரிகள், பொதுமக்களை எச்சரித்து விரட்டியடித்தனர். கலெக்டரின் உத்தரவை மீறி கடைகள் திறந்தால் வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் எச்சரித்தனர்.
இதேபோன்று சத்துவாச்சாரி கெங்கையம்மன் கோவில் அருகேயுள்ள காய்கறி மார்க்கெட், காகிதப்பட்டறை உழவர்சந்தையிலும் பொதுமக்களின் கூட்டம் ஏராளமாக காணப்பட்டது. சிலர் முகக்கவசம் அணியாமல் பொருட்களை வாங்கி சென்றனர். மேலும் தனிமனித இடைவெளியும் அங்கு கடைப்பிடிக்கவில்லை.
கொரோனா தொற்று பரிசோதனை காரணமாக மண்டித்தெரு, லாங்குபஜார் கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. அதேபோன்று சுண்ணாம்புகாரதெரு, ரொட்டிகாரதெரு, ஆகாபஜார், அண்ணாபஜார், நியுசிட்டிங்பஜார், பர்மாபஜார் ஆகிய தெருக்களில் உள்ள கடைகளும் மூடப்பட்டதால், அந்தபகுதி வெறிச்சோடி காணப்பட்டது.
ஓட்டல்கள், பேக்கரியின் முன்பகுதியில் பார்சல் மட்டும் வழங்கப்படும் என்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்தது. பெரும்பாலான டீ, சலூன் கடைகள், அழகுநிலையங்கள் மூடப்பட்டிருந்தன. சில இடங்களில் சலூன் கடைகள் பாதி இரும்பு ஷட்டரை மூடியபடி செயல்பட்டன. அதேபோன்று இறைச்சி கடைகளும் விதியை மீறி திறந்திருந்தன. கிருபானந்தவாரியார் சாலையில் தள்ளுவண்டிகளில் காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்யப்பட்டன.
Related Tags :
Next Story