செஞ்சி அருகே பரபரப்பு: பட்டாக்கத்தியால் வாலிபரை வெட்டி மொபட் திருட்டு - தாய், பாட்டியிடமும் நகையை பறித்துச்சென்ற கும்பலுக்கு வலைவீச்சு


செஞ்சி அருகே பரபரப்பு: பட்டாக்கத்தியால் வாலிபரை வெட்டி மொபட் திருட்டு - தாய், பாட்டியிடமும் நகையை பறித்துச்சென்ற கும்பலுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 21 Jun 2020 4:15 AM IST (Updated: 21 Jun 2020 9:39 AM IST)
t-max-icont-min-icon

செஞ்சி அருகே பட்டாக்கத்தியால் வாலிபரை வெட்டி மொபட்டை திருடிய கும்பல், அவரது தாய் மற்றும் பாட்டியிடம் நகையை பறித்துச்சென்றது. இந்த பரபரப்பு சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

செஞ்சி, 

செஞ்சி அருகே உள்ள வரிக்கால் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணராஜ். இவரது மனைவி கிறிஸ்டிமேரி(வயது 42). இவர்களுடைய மகன் தென்னவன்(18). இவரது பாட்டி அமலப்பமேரி(60). இவர்கள் அனைவரும் விவசாய நிலத்தில் வீடு கட்டி வசித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் கிறிஸ்டிமேரி, அமலப்பமேரி ஆகிய 2 பேரும் வீட்டிற்குள் படுத்து தூங்கினர். தென்னவன், வீட்டின் முன்பு கட்டிலில் படுத்து தூங்கினார்.

இரவு 11.30 மணி அளவில் 4 பேர் கொண்ட கும்பல், முகமூடி அணிந்தபடி அங்கு வந்தது. அங்கு நிறுத்தி வைத்திருந்த மொபட்டை அந்த கும்பல் திருடி, அதனை அங்கிருந்து மெதுவாக ஓட்டிச்சென்றது. இந்த சத்தம் கேட்டு தென்னவன், திடுக்கிட்டு எழுந்தார். உடனே அவர், ஓடிச்சென்று அந்த கும்பலிடம் இருந்த தனது மொபட்டை தருமாறு கூறினார். அப்போது அந்த கும்பலில் ஒருவர், திடீரென தான் வைத்திருந்த பட்டா கத்தியால் தென்னவனின் தலை, மற்றும் கையில் வெட்டினார். வலிதாங்க முடியாமல் அவர் அலறி, துடித்தார்.

இந்த சத்தம் கேட்டு கிறிஸ்டிமேரி, அமலப்பமேரி ஆகிய 2 பேரும் ஓடிவந்தனர். உடனே அந்த கும்பல், அவர்களையும் தாக்கி அவர்கள் அணிந்திருந்த நகையை பறித்தனர். மேலும் அந்த கும்பல், மொபட்டை திருடிக்கொண்டு, அங்கிருந்து மின்னல் வேகத்தில் சென்றனர். இதில் காயமடைந்த தென்னவன், அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

இது பற்றி தகவல் அறிந்ததும் அனந்தபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி மற்றும் போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர். மேலும் இந்த வழக்கில் குற்றவாளிகள் பற்றி துப்பு துலக்க விழுப்புரத்தில் இருந்து மோப்பநாய் ராக்கி வரவழைக்கப்பட்டது. சம்பவம் நடந்த இடத்தில் மோப்பமிட்ட அந்தநாய், அங்கிருந்து சிறிது தூரம் வரை ஓடிச்சென்று நின்றது. யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. இது குறித்த புகாரின் பேரில் அனந்தபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story