கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தம்பதி உள்பட 6 பேருக்கு கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 63 ஆக உயர்வு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று தம்பதி உள்பட 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது இதன் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 63-ஆக உயர்ந்துள்ளது.
கிருஷ்ணகிரி,
தமிழ்நாட்டில் கொரோனா இல்லாத பச்சை மண்டலமாக இருந்து வந்த கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தற்போது கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 30-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
அந்த வகையில் ஆந்திர மாநிலத்தில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றி வந்த, ஓசூர் வக்கீல் லே அவுட் பகுதியை சேர்ந்த 28 வயதான கணவன், மனைவி இருவரும், கடந்த சில நாட்களுக்கு முன்பு ராணிப்பேட்டைக்கு உறவினர் வீட்டுக்கு சென்றனர். அங்கு உறவினர் ஒருவரை சந்தித்து விட்டு, வேலூரில் நடந்த துக்க நிகழ்ச்சியில் அவர்கள் பங்கேற்றனர்.
பின்னர் அவர்கள் கடந்த 18-ந் தேதி ஓசூர் திரும்பினர். ராணிப்பேட்டையில் அவர்கள் சந்தித்த நபருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், கடந்த 18-ந் தேதி இந்த தம்பதிக்கும் மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவர்கள் 2 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது நேற்று முன்தினம் இரவு உறுதியானது.
அதேபோல், சென்னை பூந்தமல்லியில் உள்ள காய்கறி மற்றும் பழக்கடையில் பணியாற்றி விட்டு, ஊத்தங்கரை அடுத்த காரப்பட்டு பகுதிக்கு திரும்பிய 22 வயது ஆண், சென்னை திருவான்மியூர் பகுதியில் பேக்கரி கடை நடத்தி வரும், பர்கூரை அடுத்த சீமனூர் பகுதியை சேர்ந்த 34 வயதான ஆணுக்கும், கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவரது கர்ப்பிணி மனைவி ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை தனியார் டயர் நிறுவனத்தில் பணியாற்றி விட்டு திரும்பிய கல்லாவியை சேர்ந்த 30 வயது ஆண், சென்னையில் இருந்து திரும்பிய அந்தேரிப்பட்டியை சேர்ந்த 35 வயது ஆண் என மொத்தம் 6 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. அவர்கள் அனைவரும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. அவர்கள் வசித்து வந்த பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு ‘சீல்‘ வைக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 63-ஆக உயர்ந்துள்ளது. இதில் 2 பேர் இறந்துள்ளனர். மீதம் உள்ள 61 பேரில், 25 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்கள். 36 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story