தேனி மாவட்டத்தில், 2 டாக்டர்கள், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட மேலும் 20 பேருக்கு கொரோனா - பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 216 ஆக உயர்வு
தேனி மாவட்டத்தில் 2 டாக்டர்கள், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட மேலும் 20 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், பாதிப்பு எண்ணிக்கை 216 ஆக உயர்ந்தது.
தேனி,
தேனி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 196 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் மேலும் 20 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இதில், சின்னமனூர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் 34 வயது சப்-இன்ஸ்பெக்டர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளார். அவர், கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளில் பணியாற்றிய நிலையில், அவருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் அவருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
இதேபோல், தேனி கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றிய பயிற்சி டாக்டர் ஒருவரும், தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் 23 வயது பயிற்சி பெண் டாக்டர் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் பெரியகுளம் தென்கரையில் 10 வயது சிறுவன், 16 வயது சிறுமி உள்பட 7 பேர், வடகரையில் 13 வயது சிறுமி உள்பட 4 பேர் என மொத்தம் 11 பேர் பெரியகுளம் பகுதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் அனைவரும் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள்.
இதேபோல், சென்னையில் இருந்து திரும்பி வந்த தேனி பகவதியம்மன் கோவில் தெருவை சேர்ந்த 38 வயது நபர், திருப்பூரில் இருந்து திரும்பி வந்த அல்லிநகரத்தை சேர்ந்த 40 வயது பந்தல் தொழிலாளி ஆகியோரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், உத்தமபாளையம் அருகே உள்ள அனுமந்தன்பட்டியை சேர்ந்த 35 வயது அரசு பஸ் கண்டக்டருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர், கோவை மாவட்டம் அன்னூரில் பணியாற்றி வருகிறார். சொந்த ஊருக்கு வந்த நிலையில், பாதிப்பு கண்டறியப்பட்டது.
இதுதவிர, தேனி துப்புரவு பணியாளர் குடியிருப்பை சேர்ந்த தூய்மை பணியாளரின் 45 வயது மனைவி மற்றும் தேனி பாரஸ்ட் ரோடு பகுதியை சேர்ந்த தந்தை, மகள் ஆகியோருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஒரேநாளில் 17 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 216 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். 123 பேர் சிகிச்சை பெற்று குணமாகி வீடு திரும்பியுள்ளனர். அதன்படி தற்போது 91 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Related Tags :
Next Story