திருச்சி அரசு ஆஸ்பத்திரியில், நர்சிங் மாணவிகள் விடுதி கொரோனா வார்டாக மாற்றம் - 375 மெத்தைகள் புதிதாக கொண்டுவரப்பட்டன
திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் நர்சிங் மாணவிகள் விடுதி கொரோனா வார்டாக மாற்றப்பட உள்ளது.
திருச்சி,
திருச்சி மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்தப்படி உள்ளது. திருச்சி மாவட்டத்தில் இதுவரை 230 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 148 பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 81 பேர் சிகிச்சையில் உள்ளனர். சென்னை மற்றும் வெளிமாநிலம், வெளிமாவட்டங்களில் இருந்து திருச்சி திரும்பியவர்களுக்கும், அவர்களுடன் தொடர்பில் இருப்பவர்களுக்கும் தொற்று பரவ தொடங்கி இருக்கிறது.
முக கவசம் அணிந்து சமூக பரவலை கடைப்பிடிக்காததே இதற்கு காரணம் என்றும், வெளியில் இருந்து வருபவர்களிடம் கை குலுக்கி பேசுவதை தவிர்க்காததும் நோய் தொற்றுக்கு அதிக காரணமாக இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் 340 படுக்கைகளும், ஸ்ரீரங்கம், மணப்பாறை மற்றும் துறையூர் அரசு ஆஸ்பத்திரிகளில் தலா 30 படுக்கைகள் வீதம் 90 படுக்கைகளும், குழுமணி, நவல்பட்டு மற்றும் இனாம்குளத்தூர் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தலா 20 படுக்கைகள் என 60 படுக்கைகளும் உள்ளன. மேலும் தனியார் மருத்துவ கல்லூரி மற்றும் 4 தனியார் ஆஸ்பத்திரிகளில் 190 படுக்கை வசதிகள் கொரோனா சிகிச்சைக்காக உள்ளது.
ஏற்கனவே திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் திருச்சி மாவட்ட மக்கள் மட்டுமல்லாது பிற மாவட்டத்தை சேர்ந்தவர்களும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் கூடுதலாக நோயாளிகள் வந்துவிட்டால் சிகிச்சை அளிக்க வசதியாக மருத்துவ அதிகாரிகளின் வழிகாட்டுதலின் பேரில், தற்போது கூடுதலாக 375 படுக்கை வசதி ஏற்படுத்த திட்டமிடப்பட்டது.
அரசு ஆஸ்பத்திரியில் எந்த கட்டிடத்தில் கொரோனா கூடுதல் சிறப்பு வார்டாக மாற்றலாம் என அரசு ஆஸ்பத்திரி டீன் டாக்டர் வனிதா தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது. நர்சிங் மாணவிகளுக்கு விடுமுறை விடப்பட்டு அவர்கள் அனைவரும் வீட்டிற்கு சென்றுவிட்டதால், அவசர சிகிச்சை பிரிவு அருகே அமைந்துள்ள நர்சிங் மாணவிகள் தங்கும் விடுதியை கொரோனா வார்டாக மாற்ற முடிவு செய்யப்பட்டது. இதற்காக கடந்த 2 தினங்களுக்கு முன்பு 300 இரும்பு கட்டில்கள் கொண்டுவரப்பட்டன. மேலும் நேற்று பொள்ளாச்சியில் உள்ள தனியார் மில்லில் இருந்து 375 மெத்தைகள் லாரி மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது.
Related Tags :
Next Story